by Bella Dalima 30-05-2018 | 8:41 PM
தஞ்சை பெரிய கோவிலில் இருந்து 60 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமற்போன ராஜ ராஜ சோழன் சிலை உள்ளிட்ட இரண்டு தங்க சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
தென்னிந்தியா முழுவதையும் 985 ஆம் ஆண்டு முதல் 1014 ஆம் ஆண்டு வரை ராஜ ராஜ சோழன் ஆட்சி செய்தார்.
ராஜ ராஜ சோழன் சிவபெருமானுக்கு ஆத்மார்த்தமாகக் கட்டிய தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில், "பெரிய கோவில்' என்ற அடைமொழியைப் பெற்றது.
இந்த கோவிலின் கும்பாபிஷேகத்தின் போது பெருவுடையார் எனப்படும் சிவபெருமானை நோக்கி வணங்குவது போன்ற ராஜ ராஜ சோழன் மற்றும் அவரது மனைவி லோகமாதேவி ஆகியோரது உருவச்சிலைகள் தங்கத்தால் செய்து வைக்கப்பட்டன.
ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த இந்த தங்கச்சிலைகள் 1900 ஆம் ஆண்டு வரை கோவிலின் வடமேற்கு மண்டபத்தில் இருந்தது. அதன் பின்னர் மர்ம நபர்களால் திருடப்பட்டன.
இதனையடுத்து, காணாமற்போன சிலைகளைக் கண்டுபிடிக்க முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது, குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள கவுதம் சாராபாய் அறக்கட்டளைக்கு சொந்தமான அருங்காட்சியகத்தில் ராஜ ராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டது.
74 சென்டிமீட்டர் உயரம் கொண்ட ராஜ ராஜ சோழனின் சிலை மற்றும் லோகமாதேவியின் 53 சென்டிமீட்டர் உயரம் கொண்ட சிலை என்பன 100 கோடிக்கும் அதிக பெறுமதியுடையதென தெரிவிக்கப்படுகின்றது.
காணாமற்போன சிலைகள் தொடர்பில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு பொலிஸார் நடத்திய விசாரணையில் தஞ்சை பெரிய கோவிலில் இருந்த ராஜ ராஜ சோழன் சிலை உள்ளிட்ட 13 சிலைகள் காணாமற்போனமை உறுதி செய்யப்பட்டது.
தற்போது இந்த இரு சிலைகளும் ரயில் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.