தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும்: ரஜினிகாந்த்

எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும்: ரஜினிகாந்த்

by Bella Dalima 30-05-2018 | 7:07 PM
Colombo (News 1st) "ஜல்லிக்கட்டு போராட்டத்தின் கடைசி நாளை போன்றே ஸ்டெர்லைட் போராட்டத்திலும் சமூகவிரோதிகள் நுழைந்துவிட்டனர்; சமூக விரோதிகள் காவல்துறையினரை அடித்த பிறகுதான் பிரச்சினை தொடங்கியது" என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் போராட்டத்தில் காயமடைந்தவர்களை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். முன்னதாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் காயமடைந்தவர்களை இன்று நேரில் சந்தித்தார் ரஜினிகாந்த். பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் விஷக்கிருமிகள் மற்றும் சமூக விரோதிகள் இந்த போராட்டத்தில் நுழைந்திருக்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார். மேலும்,''நான் எல்லோரையும் பார்த்தேன். சில குடும்பங்களை மட்டுமே பார்க்கமுடியவில்லை. நிறைய பேர் சோகத்தில் இருக்கிறார்கள். இந்த மாதிரி ஒரு சம்பவம் இனி நடக்கவே கூடாது. கலெக்டர் அலுவலகத்தை நோக்கி நடந்த தாக்குதல்கள், குடியிருப்புகளை எரித்தது நிச்சயமாக சாமானிய மக்கள் அல்ல. விஷக்கிருமிகள் மற்றும் சமூக விரோதிகள் இதில் நுழைந்திருக்கிறார்கள் அவர்களது வேலைதான் இது'' என்றார். ''போராட்டம் செய்யும்போது மிகவும் ஜாக்கிரதையுடன் இருக்கவேண்டும். தமிழகத்தில் சமூகவிரோதிகள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. ஜல்லிக்கட்டில் கூட அதுதான் நடந்தது. இந்த புனிதமான போராட்டம் கூட வெற்றி கிடைத்தாலும் இரத்தக்கரையோடு முடிந்திருக்கிறது. இந்த சமூக விரோதிகளை அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும். அவ்விதத்தில் புரட்சித்தலைவி ஜெயலலிதாவை நான் பாராட்டுகிறேன். விஷக்கிருமிகள் மற்றும் சமூக விரோதிகளை ஜெயலலிதா இரும்புக்கரம் கொண்டு அடக்கி வைத்திருந்தார். இவ்விடயத்தில் ஜெயலலிதாவை இப்போதைய அரசு பின்பற்றவேண்டும். இல்லையெனில் மிகவும் ஆபத்தாகும், என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். 13 பேர் இறந்துள்ளனர், துப்பாக்கிச்சூட்டுக்கு யார் அனுமதி கொடுத்தார்கள் என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது என ரஜினியிடம் செய்தியாளர்கள் கூறியபோது, '' மிகவும் குழப்பமாக இருக்கிறது. நான் ஏற்கனவே கூறியபடி காவலர் உடையில் இருப்பவர்கள் மீது கை வைப்பவர்களை விடக்கூடாது. வீடியோ கேமரா பதிவுகள், உளவுத்துறை அறிக்கைகள் உள்ளன. அதைப்பார்த்து யார் யார் காவலர்களை அடித்துள்ளனர்? யார் பொதுச்சொத்தை சேதப்படுத்தினர் என்பதைக் கண்டுபிடித்து அவர்களது புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிடவேண்டும். சமூக விரோதிகள் என அடையாளப்படுத்தவேண்டும்'' என ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார். சீருடையில் இருக்கும் பொலிஸாரை யார் அடித்தாலும் தவறு தான் என கூறிய அவர், எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் என்றும் தெரிவித்தார்.