உலகக்கிண்ண டெஸ்ட்: தொடர்ந்தும் நாணய சுழற்சி முறையை உபயோகிக்கத் தீர்மானம்

உலகக்கிண்ண டெஸ்ட்: தொடர்ந்தும் நாணய சுழற்சி முறையை உபயோகிக்கத் தீர்மானம்

உலகக்கிண்ண டெஸ்ட்: தொடர்ந்தும் நாணய சுழற்சி முறையை உபயோகிக்கத் தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

30 May, 2018 | 3:55 pm

Colombo (News 1st) 

உலகக்கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஸிப் தொடரில் நாணய சுழற்சி முறையை உபயோகிப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதான நிறைவேற்றுக்குழு தீர்மானித்துள்ளது.

மும்பையில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதான நிறைவேற்றுக்குழுவின் தலைவருமான அனில் கும்ளேயின் தலைமையில் மும்பையில் இந்த பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது.

முன்னாள் வீரர்களை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்தன இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

உலகக்கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஸிப் தொடரில் நாணய சுழற்சியின்றி போட்டிகளை நடத்துவது தொடர்பில் கடந்த 17 ஆம் திகதி சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிறைவேற்றுக்குழு அவதானம் செலுத்தியது.

போட்டியை நடத்தும் நாடுகள் தங்களுக்கு ஏற்றவாறு ஆடுகளத்தின் தன்மையை அமைத்து நாணய சுழற்சியின் மூலம் அதன் பலனைப் பெறுவதனைத் தவிர்ப்பதற்காக இந்த புதிய திட்டத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவை பரிந்துரை செய்தது.

எவ்வாறாயினும், நேற்று (29) நடைபெற்ற வருடாந்த நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் உலகக் கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஸிப் தொடரில் நாணய சுழற்சி முறையை உபயோகிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டின் மகோன்னதத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வீரர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் இந்த நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கனவான்களின் விளையாட்டாகக் கருதப்படும் கிரிக்கெட்டின் தன்மையைப் பாதுகாப்பதற்கு தாமும் தமது குழுவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அனில் கும்ளே இதன் போது கருத்து தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்