ஹெளம்பகே கொலை - ஆடுகள மாற்றம்: தொடர்பென்ன?

ஹெளம்பகே பிரேமசிறியின் கொலைக்கும் பணத்திற்காக ஆடுகளங்கள் மாற்றப்பட்டமைக்கும் இடையில் தொடர்புண்டா?

by Bella Dalima 29-05-2018 | 9:47 PM
Colombo (News 1st)  பணத்திற்கு கிரிக்கெட் ஆடுகளங்களை மாற்றியமைக்கும் செயற்பாடு தொடர்பில் அல்ஜஸீரா தொலைக்காட்சி வெளிப்படுத்திய ஆவணப்படத்தை அடுத்து, கிரிக்கெட் விளையாட்டு மற்றும் அதனுடன் தொடர்புடைய மோசடிகள் பல அம்பலமாகியுள்ளன. 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காலி கிரிக்கெட் கழகத்தின் அப்போதைய செயலாளரான ஹெளம்பகே பிரேமசிறி சுட்டுக்கொல்லப்பட்டமைக்கும் ஆடுகள மாற்றத்திற்கும் ஏதும் தொடர்புண்டா எனும் சந்தேகம் தற்போது தோன்றியுள்ளது. காலி கிரிக்கெட் கழக செயலாளரான ஹெளம்பகே பிரேமசிறி தனது மகனுடன் அம்பலாங்கொடை - மானிமுல்ல பகுதியிலுள்ள வீடு நோக்கி காரில் பயணித்த போது சுட்டுக்கொல்லப்பட்டார். பத்திற்கும் மேற்பட்ட குண்டுகள் அவரது உடலைத் துளைத்திருந்ததுடன், அவர் கொல்லப்பட்டமைக்கான காரணம் இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. பிரேமசிறி கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் அதாவது 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 முதல் 8 மணி வரை காலி மைதானத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது பணத்திற்கு ஆடுகளத்தை மாற்றியமைக்கும் செயற்பாடு குறித்து அல்ஜஸீரா முதற்தடவையாக தகவல் வெளியிட்டது​. முகவர்களுக்கு சாதகமானவாறு பணம் பெற்று ஆடுகளத்தை அமைத்தமை தொடர்பாக இடம்பெற்ற இரகசிய உரையாடலை அல்ஜஸீரா இதன்போது வெளியிட்டது. இந்த வெளிப்படுத்தல்களுக்கு அப்பாற்பட்ட பல விடயங்கள் ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்ட் மேற்கொண்ட தேடல்களில் வெளிவந்தன. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் சர்வசே ஆடுகள மற்றும் வசதிகள் ஏற்பாட்டு முகாமையாளராக செயற்படும் கொட்ஃப்ரி தாம்பரே, இந்தப் போட்டிக்கு முன்பதாக 2016 பெப்ரவரி 3 ஆம் திகதி காலி கிரிக்கெட் கழகத்தின் அப்போதைய செயலாளரான ஹெளம்பகே பிரேமசிறிக்கு அனுப்பிய கடிதத்தில் காலி சர்வதேச மைதானத்தின் அலுவலகப் பணிக்கு 15 பேர் கொண்ட அணியை நியமிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த 15 பேரில் பணத்திற்கு ஆடுகளத்தை மாற்றியமைத்த குற்றச்சாட்டுக்கு இலக்கான தரிந்து இந்திக்கவின் பெயரும் உள்ளடங்கியிருந்தது. அத்துடன், இந்தக் கடிதத்தில் தான் அவரை காலி மைதானத்தின் உதவி முகாமையாளராக நியமிக்குமாறும் முதற்தடவையாக கூறப்பட்டிருந்தது. அப்போதைக்கு ஜயனந்த வர்ணவீர மீது சுமத்தப்பட்டிருந்த ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு காரணமாக காலி மைதானத்தின் நன்மதிப்புக்கு களங்கம் ஏற்பட்டதால் இது தொடர்பாக ஆராய்ந்து பார்க்குமாறு ஹெளம்பகே பிரேமசிறி பெப்ரவரி 25 ஆம் திகதி தாம்பரேவை கோரியிருந்தார். எனினும், அந்தக் கோரிக்கையை கவனத்திற்கொள்ளாமல் பெப்ரவரி 29 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் பிரதம நிறைவேற்று அதிகாரியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட கடிதத்தின் ஊடாக கொட்ஃபிரி தாம்பரே முதலில் பெயரிட்ட 15 பேரும் குறித்த பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர். அவுஸ்திரேலிய கிரிக்கெட் விஜயத்திற்கான ஆடுகளத் தயாரிப்பிற்காக இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாக அந்த நியமனக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முடிந்து 6 நாட்களின் பின்னர் அதாவது 2016 ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி பிற்பகலில் ஹெளம்பகே பிரேமசிறி கொல்லப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட கந்தே கலாசி உதய அல்லது பொடிபோல் மற்றும் தசுன் மானவடு ஆகிய பெயர்களால் அழைக்கப்படும் இரண்டு சந்தேகநபர்களும் தொடர்ந்தும் விளக்கமறியலில் உள்ளனர். சந்தேகநபர்கள் அவ்வப்போது நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருவதுடன், இந்தக் கொலை தொடர்பாக இன்னும் உண்மை வெளிவரவில்லை. இதேவேளை, ஹெளம்பகே பிரேமசிறி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் தசுன் மானவடு என்பவரின் உறவினர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அவரது உயிருக்கு இருக்கும் ஆபத்து குறித்து தகவல் வெளியிட்டனர். பணத்திற்கு ஆடுகளத்தை மாற்றியமைத்தமை, வெவ்வேறு நபர்களை தேவைக்கு ஏற்றவாறு காலி மைதானத்தின் அலுவலகப் பணிக்கு நியமித்தமை, ஹெளம்பகே பிரேமசிறியின் கொலை ஆகியவற்றுக்கு இடையில் தொடர்புகள் உண்டா? கொலை இடம்பெற்று ஓன்றரை ஆண்டு கடந்த பின்னர் இது தொடர்பில் பல்வேறு விடயங்கள் வெளியான வண்ணமுள்ளன. ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்டுக்கு கிடைத்த கடிதங்கள் மூலம் வெளிவரும் விடயங்கனை கருத்திற்கொண்டு இந்த குற்றச்செயலை மூடி மறைப்பதற்கு இடமளிக்காமல் விசாரணை நடத்த வேண்டியது அவசியமல்லவா? இவற்றை மூடி மறைத்து உண்மைக்கு புறம்பாக பொய்யுரைக்க இடமளிப்பது யாருடைய தேவைக்காக?