ரயில்வே தொழில்நுட்ப அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு

ரயில்வே தொழில்நுட்ப முகாமைத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளது

by Bella Dalima 29-05-2018 | 3:24 PM
Colombo (News 1st)  இன்று மாலை 4 மணி முதல் 48 மணித்தியாலங்களுக்கு அடையாள பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே தொழில்நுட்ப முகாமைத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சம்பளப் பிரச்சினையை முன்வைத்து அடையாள பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் கமல் பீரிஸ் குறிப்பிட்டார். ​போக்குவரத்துத்துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாகவும் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அதிகாரிகள் இணக்கம் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார். எனினும், தமது நிறைவேற்றுக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய, இன்று அடையாள பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக கமல் பீரிஸ் கூறினார். இதேவேளை, அடையாள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, ரயில்வே ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. எவ்வாறாயினும், ரயில் சாரதிகள், பொறுப்பதிகாரிகள், நிர்வாகக்குழுவினர் உள்ளிட்டோர் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் பங்கேற்கவில்லை என ரயில் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்தார். ரயில்வே தொழில்நுட்ப முகாமைத்துவ அதிகாரிகள் சங்கம், இன்று மாலை 4 மணி முதல் 48 மணித்தியாலங்களுக்கு அடையாள பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதால், அனைத்து ரயில் ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.