குழந்தையைக் காப்பாற்றிய இளைஞருக்கு குடியுரிமை

மாடியில் தொங்கிக்கொண்டிருந்த குழந்தையைக் காப்பாற்றிய மாலி இளைஞருக்கு பிரான்ஸ் குடியுரிமை

by Bella Dalima 29-05-2018 | 5:51 PM
பாரிஸ் நகரில் நான்காவது மாடி பல்கனியில் தொங்கிய குழந்தையின் உயிரை காப்பாற்றிய மாலி நாட்டு அகதிக்கு பிரான்ஸ் குடியுரிமை வழங்கப்படும் என அதிபர் இம்மானுவல் மெக்ரோன் அறிவித்துள்ளார். மாலி நாட்டைச் சேர்ந்த மமூது கசாமா (22) வேலை தேடி பிரான்ஸ் சென்றுள்ளார். பாரீஸில் வடக்கு பகுதியில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் முன்பு மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்ததைக் கண்டார். கூட்டத்தை வேடிக்கை பார்க்கச் சென்றவர் அங்கு கட்டிடத்தின் 4 ஆவது மாடியில் பல்கனியை பிடித்தபடி 4 வயது குழந்தை அழுதபடி தொங்கிக்கொண்டிருந்ததைக் கண்டார். அதை கீழே விழாமல் பக்கத்து வீட்டில் தங்கியிருக்கும் நபர் பிடித்துக்கொண்டிருந்தார். குழந்தையை கீழே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. ஆனால், எந்தவித தயக்கமுமின்றி கசாமா 'ஸ்பைடர் மேன்' பாணியில் கட்டிடத்தின் முன்புறத்தில் சுவரைப் பிடித்தபடி மேலே ஏறினார். பின்னர் மாடி பல்கனியில் தொங்கிக்கொண்டிருந்த குழந்தையை பத்திரமாக மீட்டுக் காப்பாற்றினார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. மமூது கசாமாவுக்கு பாராட்டுகளும் குவிந்தன. இச்சம்பவம் நடந்த போது குழந்தையின் பெற்றோர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருந்தனர். இது குறித்து அவர்களிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், குழந்தையைக் காப்பாற்றிய மமூது கசாமாவை பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மெக்ரோன் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளதுடன், அவருக்கு பிரான்ஸ் நாட்டின் நிரந்தர குடியுரிமை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.