கடும் காற்றுடன் கூடிய வானிலை நீடிக்கும்

கடற்பிராந்தியங்களில் கடும் காற்றுடன் கூடிய வானிலை நீடிக்கும்

by Bella Dalima 29-05-2018 | 3:15 PM
Colombo (News 1st)  நாடு முழுவதிலும் கடற்பிராந்தியங்களில் கடும் காற்றுடன் கூடிய வானிலை நாளை மறுதினம் (31) வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனால் மீனவர்களும், கடற்சார் ஊழியர்களும் அவதானத்துடன் இருக்குமாறு வானிலை அதிகாரி வலியுறுத்தினார். காற்றுடன் கூடிய வானிலையால் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன், மின்சாரம் தடைப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடும் காற்றினால் வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன், மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக மாவட்டத்தின் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நுவரெலியா - கந்தப்பொல கோட்லோச் நோனா தோட்டத்தை ஊடறுத்து வீசிய கடும் காற்றினால் 3 வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன. நேற்று இரவு முதல் கந்தப்பொல பகுதியில் கடும் காற்று வீசுவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன், பல பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது. கண்டி - பன்வில பகுதியிலும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. இரத்தினபுரியில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதேவேளை, கடும் காற்றினால் பல பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின் கம்பிகள் மீது மரம் முறிந்து வீழ்ந்ததால் தம்புளை, நாவுல, தெல்தெனிய, குண்டசாலை மற்றும் பதுளை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டார்.