அரசாங்கம் என்னை நம்புவதில்லை:  சி.வி. விக்னேஷ்வரன்

அரசாங்கம் தம்மை நம்புவதில்லையென சி.வி. விக்னேஷ்வரன் பிரதமருக்கு அறிக்கை

by Bella Dalima 29-05-2018 | 6:47 PM
Colombo (News 1st)  பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் (27) யாழ்ப்பாணத்தை சென்றடைந்ததுடன், நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் நடைபெற்ற விசேட மீளாய்வுக் கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தார். இந்த கூட்டங்களிலும் கலந்துரையாடல்களிலும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் கலந்து கொண்டிருக்கவில்லை. எனினும், முதலமைச்சர் தனது செயலாளர் ஊடாக பிரதமருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். வட மாகாண சபை மூலம் 5000 வீடுகளை அமைக்க வேண்டியுள்ள போதிலும், அரசாங்கம் தம்மை நம்புவதில்லையென முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் அந்த ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளார். வீடமைப்பிற்கான பணத்தை அரசாங்க அதிபர்களுக்கே கொடுத்து வருவதாகவும் இப்பணத்தை நேரடியாக தமக்கு அனுப்புவதில் என்ன தயக்கம் எனவும் வட மாகாண முதலமைச்சர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் எனவும் பிரதமருக்கு தம் மீது நம்பிக்கை இல்லையெனவும் சி.வி. விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார். மாகாண அதிகாரங்களைப் பாதுகாத்து சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் எனவும் தற்போது மாகாணங்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்ற அடிப்படையில் செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் வட மாகாண முதலமைச்சர் பிரதமருக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாத தடுப்புச்சட்டம் உடனே கைவிடப்பட வேண்டும் எனவும் அரசியல் கைதிகள் அனைவரும் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் செயலகத்திற்கு முன்பாக சுமார் 30 கடிதங்கள் கிடந்தமையை பதிவு செய்ய முடிந்தது.