நில அபகரிப்பு குறித்து முதலமைச்சர் எச்சரிக்கை

தமிழர்களின் காணிகளை கபளீகரம் செய்ய முயற்சி - வடமாகாண முதலமைச்சர் குற்றச்சாட்டு

by Staff Writer 28-05-2018 | 9:59 PM
தமிழ் மக்களின் பாரம்பரிய பூமிகளையும் வாழ்விடங்களையும் வளமிக்க நிலப்பரப்புக்களையும் கபளீகரம் செய்வதற்கு கழுகுகளைப் போன்று சிலர் வட்டமடித்துக் கொண்டிருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எனினும் தமிழ் மக்கள் எதையும் உணராதவர்களாக சிறுசிறு மகிழ்ச்சிக் கேளிக்கைகளில் மூழ்கியிருப்பதாக முதலமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளார். மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட வன்னிப் பிராந்தியத்தில் தமிழர்களின் குடியிருப்புக்கள் கேள்விக் குறியாக்கப்படுவதற்கான முத்தாய்ப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு எனும் தலைப்பின்கீழ் இரகசியமாகவும் தூர நோக்குடனும் முன்னெடுக்கப்படுவதாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும் அதனை எந்த அளவுக்கு தம்மால் கட்டுப்படுத்த முடியும் என்பது கேள்விக் குறியாக உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிளிநொச்சி பல்லவராயன்கட்டுப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு முதலமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டதாக முதலமைச்சரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரகசிய நிகழ்வுகளை கட்டுப்படுத்துவதற்கும் தடுத்து நிறுத்துவதற்கும் முடிந்த வரையில் அல்லும் பகலும் முயன்று வருவதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்களையும் கல்வெட்டுக்களையும் அகழ்ந்துவிட்டு பேரினவாத மக்களின் கலாசார சின்னங்களை வேண்டுமென்றே புதைத்து வைப்பதன் மூலம் சில காலங்களின் பின்னர் குறித்த பிரதேசங்கள் தமிழர்களின் வாழ்விடங்கள் அல்ல எனக் கூறும் கபட நாடகங்கள் இரவோடு இரவாக அரங்கேறி வருவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் ஒவ்வொரு அசைவுகளும் நடவடிக்கைகளும் கவனமாக உற்றுநொக்கப்பட வேண்டிய காலம் இதுவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் தமது பிரதிநிதிகள் ஊடாகவோ அல்லது நேரடியாகவோ அறியத்தரும் பட்சத்தில் அத்தகைய நிகழ்வுகளை தடுத்து நிறுவத்துவதற்கு அல்லது வெளிநாடுகளுக்கு படம் பிடித்துக் காட்டுவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை தம்மால் செய்ய முடியும் என வடமாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்,

ஏனைய செய்திகள்