by Staff Writer 27-05-2018 | 9:52 PM
COLOMBO (News 1st) - கடந்த சில நாட்களாக நாட்டில் கடும் மழையுடனான வானிலையினால் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக இடம்பெயர்ந்துள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்க கல்விமைச்சு தீர்மானித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் தொடர்பிலான தகவல்களை வலய மட்டத்தில் சேகரிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாதிதான தெரிவித்தார்.
சேகரிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில் பாடநூல்கள், காலணி மற்றும் சீருடைகளை இழந்த மாணவர்களுக்கு அவற்றை மீண்டும் பெற்றுக்கொடுக்க உத்தேசித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்கள் தொடர்பில், விரைவில் கல்வியமைச்சுக்கு அறிவிக்குமாறு அனைத்து வலயக்கல்வி பணிப்பாளர்கள் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, வௌ்ள நிலைமை குறைவடைந்த பின்னர் சேதமடைந்துள்ள பாடசாலைகள் தொடர்பிலான ஆய்வுகளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
வௌ்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சேதமடைந்துள்ள பாடசாலைகளின் புனர்நிர்மாண நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியுதவிகளை மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கவுள்ளதாகவும் கல்வியமைச்சு கூறியுள்ளது.