ஜாலிய விக்ரமசூரியவிற்கு எதிரான குற்றப்பத்திரிகை

ஜாலிய விக்ரமசூரியவிற்கு எதிரான குற்றப்பத்திரிகை

by Staff Writer 27-05-2018 | 9:46 PM
COLOMBO (News 1st) - அமெரிக்காவின் முன்னாள் இலங்கை தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவிற்கு எதிராக அந்நாட்டின் நீதித் திணைக்களத்தினால் நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு தயாராகுவதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை இன்று வெளியிட்டுள்ளது. இது தொடர்பிலான விசாரணைகள் எப்.பீ.அய் நிறுவனம் ஊடாக இடம்பெறுவதுடன், அமெரிக்காவின் ஜூரி சபையின் ஊடாக ஜாலிய விக்ரமசூரியவிற்கு எதிராக குற்றசாட்டை முன்வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இலங்கை தூதுவராக செயற்பட்ட காலத்தில் தூதுவராலயம் ஊடாக கட்டடம் ஒன்றை கொள்வனவு செய்யும் போது அரசாங்கத்தின் மூன்று இலட்சத்து 32 ஆயிரம் டொலரை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பிலே ஜாலிய விக்ரமசூரியவிற்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விக்ரமசூரிய, மேல் நீதிமன்றத்தினால் பிணை பெற்றுக் கொண்டு தற்போது நீதிமன்றத்தை புறக்கணித்துள்ளமையினால் அவரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினாலும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஜாலிய விக்ரமசூரியவின் தூதுவர் சலுகைகள் அரசாங்கத்தினால் ரத்துச் செய்யப்பட்டுள்ள பின்புலத்தில், தான் தொடர்ந்தும் தூதுவர் சேவைக்கான சலுகைகைளை பெற்றுக் கொண்டுள்ளதாக உத்தரவு பிறப்பிக்குமாறு ஜாலிய விக்ரமசூரிய அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்ய போதிலும் அது பின்னர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தார். ஜாலிய விக்ரமசூரிய 2008 ஆம் ஆண்டில் இருந்து 2014 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் இலங்கை தூதுவராக செயற்பட்டதுடன், அதற்கு முன்னர் அவர் அமெரிக்காவில் தேயிலை வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.