by Staff Writer 27-05-2018 | 9:49 PM
COLOMBO (News 1st) - சீரற்ற வானிலையினால் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்து 13 ஆக அதிகரித்துள்ளது.
இடம்பெயர்ந்துள்ளவர்கள் 339 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அனர்த்தங்களில் சிக்கி 23 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களுக்கு இன்று பிற்பகல் 4 மணி முதல் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் 150 மில்லிமீட்டர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதை தொடர்ந்து மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய இரத்தினபுரி மாவட்டத்தின் எலப்பாத்த, குருவிட்ட, எஹலியகொட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் , கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹூபிட்டிய, தெஹியோவிட்ட, தெரணியகல, ருவண்வெல்ல, அரநாயக்க, மாவனெல்ல பகுதிகளுக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, கொத்மலை மற்றும் நுவரெலியா பிரதேச செயலாளர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கும் களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர, அகலவத்த, புலத்சிங்கள, இங்கிரிய, வலல்லாவிட்ட மற்றும் காலி மாவட்டத்தில் எல்பிட்டிய, நாகொட, நெலுவ, தவலம பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கம்பஹா மாவட்டங்களின் சில பகுதிகள் தொடர்ந்தும் நீரில் மூழ்கியுள்ளதாக மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்துள்ளார்.
இதனால் பல வீதிகளின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் 15 முகாம்களில் 116 குடும்பங்களைச் சேர்ந்த 400 க்கும் அதிகமானவர்கள் தொடர்ந்தும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் நியூஸ்பெஸ்ட்டுக்கு குறிப்பிட்டார்.
இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் அனர்த்த நிலைமை காரணமாக 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வௌ்ள நிலைமையினால் பாதிக்கப்பட்ட 4 ஆயிரத்து 983 பேர் 93 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
களுகங்கையின் நீர்மட்டம் மில்லகந்த மற்றும் அங்குருவாதொட்ட பகுதிகளிலும் அத்தனகளு ஓயாவின் நீர்மட்டம் துனமலே பகுதிகளிலும் வௌ்ளம் ஏற்படும் அளவிற்கு உயர்வடைந்து காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் மாலா அலவத்துகொட தெரிவித்தார்.
நாட்டின் பல பகுதிகளில் நாளையும் கடும் மழையுடனான வானிலையை எதிர்ப்பார்க்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதேவேளை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்கான சென்று உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபில் டிலான் சம்பத்தின் சடலம் இன்று மீட்கப்பட்டது.
கடந்த 25 ஆம் திகதி மாதம்பே - கல்முறுவ பகுதியில் வௌ்ளத்தில் சிக்குண்ட பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக 28 வயதுடைய டிலான் சம்பத் உள்ளிட்ட மாதம்பே பொலிஸ் குழுவினர் சென்றிருந்தனர்
இதன் போது சிலரை காப்பாற்றுவதற்கு முயற்சித்த டிலான் நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமற் போயிருந்தார்.
காணாமற் போனவரை தேடும் நடவடிக்ைகயில் பாதுகாப்பு பிரிவு மற்றும் பிரதேசவாசிகள் ஈடுபட்டிருந்த நிலையில் , காணாமல் போன இடத்தில் இருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் இன்று காலை அவரிடம் சடலம் மீட்கப்பட்டது.
பின்னர் சிலாபம் வைத்தியசாலைக்கு சடலம் எடுத்து செல்லப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது
உயிரிழந்த பொலிஸ் காண்ஸ்டபில் டிலான் சம்பத் பொலிஸ் மாஅதிபர் புஜித் ஜயசுந்தரவின் பரிந்துரைக்கு அமைய பொலிஸ் சார்ஜனாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது .