by Bella Dalima 26-05-2018 | 6:19 PM
வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடி மாவட்டத்தின் மீளவிட்டானில் அமையப்பெற்றுள்ளது.
லண்டனைத் தலைமையகமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனமான அனில் அகர்வாலின் Vedanta Resources நிறுவனத்தின் ஒரு அங்கமே இந்த ஸ்டெர்லைட் ஆலை.
1995 ஆம் ஆண்டு குஜராத்தில் ஸ்டெர்லைட் ஆலையைத் தொடங்க அனில் அகர்வால் முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
பல பகுதிகளில் ஆலை அமைக்க அனுமதி கோரி கிடைக்காத நிலையில், 1994 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி ஆலையை தமிழகத்தில் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.
மன்னார் வளைகுடாவில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் ஆலை அமைக்கப்பட வேண்டும் எனவும் 250 மீட்டருக்கு பசுமை வலையம் அமைக்கப்பட வேண்டும் எனவும் நிபந்தனை முன்வைக்கப்பட்டது.
இந்த ஆலையில் செம்புக்கம்பி, கந்தக அமிலம், பொஸ்பரிக் அமிலம் ஆகியன உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த உற்பத்திகளின் காரணமாக நிலத்தடி நீர், காற்று மண்டலம் பாதிக்கப்பட்டு இயற்கை சமநிலை கெடுவதுடன் மக்களும் பாதிப்பை எதிர்நோக்குவர் என கூறி தொடர்ச்சியாகப் போராட்டங்கள் வலுப்பெற்று வந்தன.
ஆலையில் இருந்து விசவாயு கசிவு ஏற்பட்டதால் அதை சுற்றி இருந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்த ஆலையிலிருந்து இதுவரை 82 முறை விஷவாயுக்கசிவு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.
அதன்படி , அப்போதைய தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா மார்ச் 30, 2013 அன்று ஸ்டெர்லைட் ஆலையின் செயற்பாட்டை நிறுத்தியுள்ளார்.
தொடர்ந்து ஜெயலிதாவின் ஆலோசனையின் பேரில் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
அனுமதிக்கப்பட்டதற்கு அதிகமான கந்தக -டை-ஆக்சைடு எனும் நச்சு வாயு இவ்வாலையில் இருந்து வெளியானதால், ஆலையைச் சுற்றியுள்ள பல கிலோமீட்டர் தூரத்திற்கு பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல், தொண்டை வலி முதலான பாதிப்புகளும் ஆலைப் பகுதியில் இருந்த மரங்கள் கருகிப் போதலும் ஏற்பட்டன.
ஸ்டெர்லைட் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பானது என தெரிவித்து பல மாநிலங்கள் எதிர்த்த நிலையில், அதை தமிழகத்தில் அமைப்பதற்கு இந்தக் கம்பெனியின் ஆலோசகராக இருந்து இந்த கம்பெனியை தூத்துக்குடியில் நிறுவுவதற்கு முயற்சி செய்து வெற்றியடைந்தவர் காங்கிரஸைச் சேர்ந்த ப. சிதம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது.