வலி வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு

வலி வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த 36 ஏக்கர் காணி விடுவிப்பு

by Bella Dalima 26-05-2018 | 4:28 PM
Colombo (News 1st)  யாழ்ப்பாணம் - வலி வடக்கு, காங்கேசன்துறை மேற்கு பகுதியில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் பாதுகாப்புப் படையினர் வசமிருந்த 36 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. காற்றடைப்பு, மாப்பிராய், மாங்கொல்லை ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய காணியே இன்று முற்பகல் தெல்லிப்பளை பிரதேச செயலாளரிடம் உத்தியோகப்பூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது. சுமார் 100 குடும்பங்களுக்கான காணி இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி இந்த கிராம மக்கள் தமது சொந்த மண்ணிலிருந்து வௌியேறினர். இதுவரையில் இந்த மக்கள் தமது உறவினர்கள் மற்றும் நலன்புரி முகாம்களில் தங்கி வந்தனர். இந்த நிலையில், இந்த மக்களின் காணிகளை தெல்லிப்பளை பிரதேச செயலாளரிடம் இலங்கை இராணுவம்​ இன்று முற்பகல் கையளித்துள்ளது. இதேவேளை, காங்கேசன்துறை சந்தியிலிருந்து கீரிமலை நோக்கி பயணிக்கும் 600 மீட்டர் வீதியும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.