மக்களுக்கான விசேட சுகாதார ஆலோசனைகள் வௌியீடு

மக்களுக்கான விசேட சுகாதார ஆலோசனைகள் வௌியீடு

by Bella Dalima 26-05-2018 | 3:59 PM
Colombo (News 1st)  சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான விசேட சுகாதார ஆலோசனைகள் வௌியிடப்பட்டுள்ளன. மாகாண சுகாதார சேவைகள் பணிமனைகள், மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்களங்களூடாக இந்த ஆலோசனைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அபிவிருத்தி செயலணியின் பணிப்பாளரும், தொற்றுநோய் பிரிவின் விசேட சமூக வைத்திய நிபுணருமான பபா பலிஹவடன குறிப்பிட்டார். இயலுமானவரை சுத்தமான குடிநீரைப் பயன்படுத்துமாறு அவர் அறிவுறுத்தினார். மேலும், சவர்க்காரம் இட்டு கை, கால்களைக் கழுவ வேண்டும் எனவும், உணவுகளை உரிய முறையில் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வைத்திய நிபுணர் பபா பலிஹவடன வலியுறுத்தினார். வௌ்ளம் காரணமாக நீர், உணவு அசுத்தமடைந்திருக்கும் என்பதால் அவற்றைப் பயன்படுத்தும் பட்சத்தில் நோய்த்தாக்கத்திற்கு உள்ளாக நேரிடும் எனவும் அவர் கூறினார். தற்காலிக முகாம்களில் மக்கள் செரிந்து வாழும் போது நோய்த்தொற்றுகள் பரவும் வீதம் அதிகரிக்கும் என்பதால், இயலுமானவரை முகாம்களில் தங்கியுள்ளவர்கள் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சரும நோய்கள் அல்லது தடுமல், இருமல் மற்றும் காய்ச்சல் என்பன காணப்படும் பட்சத்தில் உடனடியாக வைத்தியரை நாடி மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் சுகாதார அபிவிருத்தி செயலணியின் பணிப்பாளரும், தொற்றுநோய் பிரிவின் விசேட சமூக வைத்திய நிபுணருமான பபா பலிஹவடன தௌிவூட்டினார்.