தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் எதிரொலி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் எதிரொலி: வேதாந்தா நிறுவனங்களை விலக்கி வைக்குமாறு இங்கிலாந்தின் எதிர்க்கட்சி கோரிக்கை

by Bella Dalima 26-05-2018 | 6:05 PM
வேதாந்தா குழுமத்தின் நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என இங்கிலாந்தின் எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தின் தூத்துக்குடியில் கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது, பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து லண்டன் பங்குச் சந்தையில், வேதாந்தா நிறுவனத்தின் பங்கு விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் செயற்பட்டு வரும் வேதாந்தா நிறுவனம், தனது ஆலைகளுக்காக பொதுமக்களை அவர்களது வசிப்பிடத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதாகவும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைப்பதாவும் சூழலியலுக்கு எதிரான தொழிற்சாலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிர்ச்சி அளிப்பதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இங்கிலாந்தின் எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து, லண்டன் பங்குச் சந்தையில் இருந்து வேதாந்தா நிறுவனத்தின் பங்குகளை விலக்க வேண்டும் என்றும் தொழிலாளர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.