கிளி. பஸ் ஊழியர்களின் பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

கிளிநொச்சி தனியார் பஸ் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

by Bella Dalima 26-05-2018 | 8:37 PM
Colombo (News 1st)  கிளிநொச்சி மாவட்ட தனியார் பஸ் ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது. வட மாகாண அதிகார சபையின் தலைவருடன் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஶ்ரீதரன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து பணிப்பகிஷ்ரிப்பு கைவிடப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். வழித்தட பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக தனியார் பஸ் உரிமையாளார்கள் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட தலைவர் நாகராஜா நகுலராஜா குறிப்பிட்டார். தமது கோரிக்கையையும் மீறி வலைப்பாடு கிராமத்திற்கும் வவுனியாவிற்கும் இடையில் பஸ் ஒன்றை வட மாகாண போக்குவரத்து அதிகார சபை சேவையில் அமர்த்தியுள்ளதாக அவர் கூறினார். இதன் காரணமாக கிளிநொச்சி மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக நாகராஜா நகுலராஜா தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் தொடர்பில் வட மாகாண போக்குவரத்து அதிகார சபை எதேச்சாதிகாரமாக செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இந்த குற்றச்சாட்டு தொடர்பில் வட மாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் அருளானந்தம் நிகோலஸ் பிள்ளையிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. மக்களின் கோரிக்கைக்கு அமையவே வலைப்பாடு கிராமத்திற்கான போக்குவரத்து வழித்தடம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் பதிலளித்தார். கிளிநொச்சி மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்களின் பகிஷ்கரிப்பு நியாயமற்றது எனவும் அருளானந்தம் நிகோலஸ் பிள்ளை தெரிவித்தார். தனியார் பஸ் உரிமையாளர்களின் பகிஷ்கரிப்பு காரணமாக பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.