IPL இறுதிப் போட்டிக்கு சன்ரைசர்ஸ் தகுதி 

இறுதிப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

by Bella Dalima 26-05-2018 | 3:28 PM
ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் IPL இறுதிப்போட்டிக்குள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நுழைந்தது. கொல்கத்தா ஈடர்ன் கார்டன்ஸ் மைதானத்தில் மின்னொளியில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டிக்கான தகுதிகாண் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 14 ஓட்டங்களால் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி கொண்டது. இதன் பிரகாரம், IPL இறுதிப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகள் களம் காணவுள்ளன. நேற்றைய போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார். இதன் பிரகாரம், முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஷிகர் தவான், சஹா ஜோடி ஆரம்ப துடுப்பாட்டத்தை வழங்கியது. ஷிகர் தவான் 34 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க, சஹா 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அணித்தலைவர் வில்லியம்சன் 3 பந்துவீச்சுகளை எதிர்கொண்டு 3 ஓட்டங்களை மாத்திரமே அணிக்காக பெற்று பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். ஷாகிப் அல் ஹசன் 28 ஓட்டங்களுடனும் ஹூடா 19 ஓட்டங்களுடனும் ரஷிட் கான் 34 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்களை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் குல்தீப் யாதவ் 2 விக்கட்களை கைப்பற்றினார். 175 என்ற ஓட்ட எண்ணிக்கையை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்களை இழந்து 160 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. லைன் 48 ஓட்டங்களை அணிக்காக அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, ரானா 22 ஓட்டங்களுடனும் ஷூப்மன் கில் 30 ஓட்டங்களையும் அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் 8 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் ரஷிட் கான் 3 விக்கட்களை கைப்பற்றியதுடன், ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார். இதன்பிரகாரம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 14 ஓட்டங்களால் வீழ்த்தி சன்ரைசஸ் ஹைதராபாத் அணி வெற்றி கொண்டது. நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் சைதராபாத் அணி, இறுதிப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியுடன் மோதவுள்ளது. IPL இறுதிப் போட்டி நாளை மும்பையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற இறுதி 5 போட்டிகளில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளை தன்வசப்படுத்தியதுடன், ஒரேயொரு போட்டி மாத்திரமே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வசமாகியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.