ஆட்ட நிர்ணயத்தில் இலங்கையர் இருவர் தொடர்பு

ஆட்ட நிர்ணயத்தில் இலங்கையர் இருவர் தொடர்பு: அல் ஜஸீராவின் இரகசிய ஆய்வில் உண்மை வௌியானது

by Bella Dalima 26-05-2018 | 7:40 PM
Colombo (News 1st)  ஆட்ட நிர்ணயம் தொடர்பிலான ஆவணப்படமொன்றை வெளியிடுவதற்கு அல் ஜஸீரா தொலைக்காட்சி தயாராகி வருகிறது. இதில் இலங்கையர்கள் இருவர் தொடர்புபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அல் ஜஸீரா தொலைக்காட்சி இரகசியமான முறையில் செய்து வந்த ஆய்வின் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி, காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் உதவி முகாமையாளரான தரங்க இந்திக்க மற்றும் முதல்தர கிரிக்கெட் தொடரில் விளையாடும் தரிந்து மென்டிஸ் உள்ளிட்டோர் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டுள்ளனர். ரொபின் மொரிஸ் என்ற நபர் காலி மைதானத்தின் தன்மையை பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகும் வகையில் மாற்றியமைப்பதற்காக நூற்றுக்கு 30 சதவீத தரகுப்பணத்தைப் பெற்றுள்ளார். 2016 ஆம் ஆண்டு இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற மைதானமானது பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானதாக அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் போட்டியில் இலங்கை அணியின் வெற்றி இலக்கு 229 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டதுடன், அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 106 ஓட்டங்களையும் இரண்டாம் இன்னிங்ஸில் 183 ஓட்டங்களையும் பெற்றது. 85 ஓவர்களில் அவுஸ்திரேலியா அதன் முதல் மற்றும் இரண்டாம் இன்னிங்ஸ்களில் 18 விக்கட்களை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற தொடரிலும் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக காலி மைதானத்தின் தன்மையை மாற்றியமைப்பதற்கும் இவர்கள் தீர்மானித்துள்ளனர். இதனால் இந்தப் போட்டியில் இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 600 ஓட்டங்களை குவித்தது. காலி மைதானத்தின் தன்மையை பந்தயக்காரர்களுக்கு ஏற்ற விதத்தில் மாற்றியமைப்பதற்காக தனியார் ஹோட்டல் ஒன்றின் அறையில் வைத்து திட்டமிடப்பட்டிருந்த தகவலை அல் ஜஸீரா தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் இரகசியமாகப் பதிவு செய்துள்ளனர். இந்த கலந்துரையாடலில் தரங்க இந்திக்க மற்றும் தரிந்து மென்டிஸ் ஆகியோரே மைதானத்தின் தன்மையை மாற்றும் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக ரொபின் மொரிஸ் கூறியுள்ளார். இங்கிலாந்திற்கு எதிரான கிரிக்கெட் தொடரிலும் இவர்கள் காலி மைதானத்தின் தன்மையை மாற்றியமைப்பதற்கு உத்தேசித்துள்ளதாக அல் ஜஸீரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. தமது வீரர்களுக்கு இது தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் உதவி முகாமையாளரான தரங்க இந்திக்க இதற்காக அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனத்திடமிருந்து 37 ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர் தரகுப்பணத்தைப் பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆட்ட நிர்ணயம் தொடர்பிலான மேலதிகத் தகவல்கள் உள்ளடங்கிய ஆவணப்படமொன்றை அல் ஜஸீரா தொலைக்காட்சி நாளை வெளியிடவுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவை குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதற்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கையொன்றினூடாக அறிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியான ஆஷ்லி த சில்வா சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதான நிறைவேற்று அதிகாரியான டேவிட் ரிச்சட்சனுடன் இது தொடர்பில் கலந்துரையாடி வருவதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.