பலத்த மழையினால் 1,27,913 பேர் பாதிப்பு, 16 பேர் உயிரிழப்பு

பலத்த மழையினால் 1,27,913 பேர் பாதிப்பு, 16 பேர் உயிரிழப்பு

பலத்த மழையினால் 1,27,913 பேர் பாதிப்பு, 16 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

25 May, 2018 | 3:30 pm

Colombo (News 1st) 

நாட்டின் 20 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.

பலத்த மழையினால் 1,27,913 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட 55,759 பேர் முகாம்களில் தங்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

ராஜாங்கனை, தெதுருஓயா, தப்போவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு பிரதீப் கொடிப்பிலி கேட்டுக்கொண்டார்.

இதேவேளை இரத்தினபுரி, நுவரெலியா, களுத்துறை, காலி, கேகாலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுக்கப்பட் மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, எலபாத்த, எஹலியகொட மற்றும் குருவிட்ட ஆகிய பகுதிகளுக்கும் கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹுபிட்டிய, தெஹிஓவிட்ட, தெரணியகல, அரநாயக்க, மாவனெல்ல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை ஆகிய பகுதிகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த, பாலிந்தநுவர, புலத்சிங்கள ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் காலி மாவட்டத்தின் எல்பிட்டிய, நாகொட, நெலுவ ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாத்தளை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்துவருகின்றது.

இதன் காரணமாக பன்சலதன்ன தோட்டத்திலுள்ள வீடென்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்துள்ளது.

தப்போவ நீர்த்தேக்கத்தின் அனைத்து வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மதுரங்குளி – ஶ்ரீமாபுரம் பகுதியில் சுமார் 90 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்கள் ஶ்ரீமாபுரத்திலுள்ள பள்ளிவாசலில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

முந்தல் பிரதேச செயலகத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்கான சமைத்த உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

பலத்த மழை காரணமாக தப்போவ நீர்த்தேக்கத்தின் 20 வான்கதவுகளும் இன்று அதிகாலை திறக்கப்பட்டன.

இதேவேளை மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 முதல் 150 மில்லிமீட்டர் வரை மழை வீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்