நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றார் கர்நாடக முதல்வர் குமாரசுவாமி

நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றார் கர்நாடக முதல்வர் குமாரசுவாமி

நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றார் கர்நாடக முதல்வர் குமாரசுவாமி

எழுத்தாளர் Bella Dalima

25 May, 2018 | 4:59 pm

கர்நாடக சட்டசபையில் முதலமைச்சர் குமாரசுவாமி ஆட்சி மீதான நம்பிக்கை தீர்மானத்தின் மீது இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் 117 சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற கர்நாடக சட்டசபைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை.

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி 104 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 78 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 38 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

இந்த நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இணைந்து ஆட்சியமைக்க தீர்மானித்த போதிலும் மாநில ஆளுநர் அதற்கு இணங்கவில்லை.

இதனையடுத்து, பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார்.

தமது கோரிக்கையை பரிசீலிக்காது ஆட்சியமைப்பதற்கான சந்தர்ப்பத்தை பாரதிய ஜனதாக் கட்சிக்கு வழங்கிய ஆளுநரின் தீர்ப்பினை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளினால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து, பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உச்சநீதிமன்றத்தால் எடியூரப்பாவிற்கு உத்தரவிடப்பட்டது.

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னரே தமது முதல்வர் பதவியை எடியூரப்பா இராஜினாமா செய்தார்.

இதனையடுத்து, மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மாநில தலைவர் H.D.குமாரசுவாமி, காங்கிரஸ் ஆதரவுடன் மாநிலத்தின் முதல்வராக கடந்த 23 ஆம் திகதி பதவியேற்றார்.

எவ்வாறாயினும், பதவியேற்றதிலிருந்து 15 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தால் குமாரசுவாமிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னணியில், இன்று நடத்தப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் குமாரசுவாமி தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்