பல பகுதிகள் தொடர்ந்தும் நீரில் மூழ்கியுள்ளன

நாட்டின் பல பகுதிகள் தொடர்ந்தும் நீரில் மூழ்கியுள்ளன: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு

by Bella Dalima 24-05-2018 | 8:42 PM
Colombo (News 1st)  கடும் மழையுடனான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,25 ,954 ஆக உயர்வடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். 54,205 இற்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன், அவர்கள் 251 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சீரற்ற வானிலையால் 19 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை மற்றும் வௌ்ளம் காரணமாக புத்தளம், களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளின் தாழ்நிலப் பகுதிகள் இன்று நீரில் மூழ்கிக் காணப்பட்டன. நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் இன்றும் அப்பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். பலத்த மழை காரணமாக கொலொன்னாவை, வெல்லம்பிட்டிய, வெலே வத்த, களனி, நதீகம ஆகிய பகுதிகள் தொடர்ந்தும் நீரில் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் கொடுவில காமினி வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நாகஹவத்த, சேதவத்த ஆகிய பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. சீரற்ற வானிலையை அடுத்து, வத்தளை - பரணவத்த பிரதேசமும் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட 300 குடும்பங்கள் கெரவலப்பிட்டிய வித்யாலோக வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, கருவலகஸ்வெவ - கொன்வெவ நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால், கொன்வெவ கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள யானை வேலி முற்றாக அழிவடைந்துள்ளது. நாத்தாண்டியை அண்மித்த பல பிரதேசங்கள் தொடர்ந்தும் நீரில் மூழ்கியுள்ளன. மாதம்பே - தோப்புவ பிரதான வீதியின் சில இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. சிலாபம் - கொழும்பு பிரதான வீதியின் மாதம்பே பிரதேசத்தில் நீரில் அடித்துச்செல்லப்பட்ட இளைஞர்கள் மூவரை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். இதேவேளை, சிலாபம் - துன்மோத பிரதேசத்தில் நீரில் அடித்துச்செல்லப்பட்ட வேனொன்றை கடற்படையினர் மீட்டுள்ளனர். பலத்த மழையினால் காலி மாவட்டத்தின் பல பகுதிகள் தொடர்ந்தும் நீரில் மூழ்கியுள்ளன. கிங் கங்கையின் இரு மருங்கிலும் உள்ள தாழ் நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. பத்தேகத, அகலிய, தொடங்கொட, நாகொட ஆகிய வீதிகள் நீரில் மூழ்கிக் காணப்பட்டன. மாத்தறை மாவட்டத்திலும் தாழ் நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. நேற்றைய தினம் முழுவதும் பெய்த மழை காரணமாக அக்குரஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் தொடர்ந்தும் நீரில் மூழ்கியுள்ளன. பானதுகம பகுதியில் நில்வளா கங்கை பெருக்கெடுத்துள்ளது. இதனால் கத்துவ, மாலிம்பட, அத்துரஎலிய ஆகிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. அக்குரஸ்ஸ ஊடான கத்துவ வீதியின் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது. மஸ்கெலியா - சாமி மலை - கவரவெல தோட்டத்தில் நேற்று முன்தினம் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் 8 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் குடியிருப்புகளில் இருந்து வௌியேற்றப்பட்டனர். இவர்கள் கவரவில தோட்ட வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மகாவலி கங்கை பெருக்கெடுத்தமை மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக நாவலப்பிட்டி - பெனிகொடமுல்ல பகுதியில் இருந்து வௌியேற்றப்பட்ட 12 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் நாவலப்பிட்டி - வேலும்வனாராமய விஹாரையில் தங்கியுள்ளனர். நாவலப்பிட்டி - சொய்சாகல பகுதியில் இருந்து வௌியேற்றப்பட்ட 50 பேர் நாவலப்பிட்டி நகர சபை மண்டபத்தில் மூன்று நாட்களாக தங்கியுள்ளனர். கண்டி, வத்தேகம - பம்பரல்ல பிரதான வீதியில் உளுகங்கை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இன்று அதிகாலை 4 மணியளவில் மண்மேடு சரிந்து பிரதான வீதியில் வீழ்ந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். உளுகங்கை, 26 ஆம் கட்டை பகுதியில் தொடர்ந்தும் கற்பாறைகள் சரிந்து வீழ்வதாக பொலிஸார் கூறினர். வௌ்ளம் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 2500-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் தெதுரு ஓயாவின் 8 வான்கதவுகளும் தப்போவ நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகளும் ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.