மனித நேயத்துடன் மக்கள் வழங்கிய நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்டோரிடம் ஒப்படைக்கப்பட்டன

மனித நேயத்துடன் மக்கள் வழங்கிய நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்டோரிடம் ஒப்படைக்கப்பட்டன

மனித நேயத்துடன் மக்கள் வழங்கிய நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்டோரிடம் ஒப்படைக்கப்பட்டன

எழுத்தாளர் Bella Dalima

24 May, 2018 | 8:09 pm

Colombo (News 1st) 

சக்தி சிரச நிவாரண யாத்திரைக்கு மனித நேயத்துடன் மக்கள் வழங்கிய நிவாரணப் பொருட்கள் இன்று பாதிக்கப்பட்ட மக்களின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டன.

கடந்த மூன்று நாட்களாக மக்கள் வழங்கிய நிவாரணப் பொருட்கள் இன்று அதிகாலை வரை கொழும்பிலுள்ள MTV/MBC தலைமையக வளாகத்தில் பொதியிடப்பட்டன.

வழிபாடுகளின் பின்னர், நிவாரண யாத்திரை வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் தலைமையக வளாகத்திலிருந்து இன்று காலை பயணத்தை ஆரம்பித்தது.

கடும் மழையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்ட இரத்தினபுரி, கேகாலை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய பகுதிகளை நோக்கி நிவாரண யாத்திரை முன்னெடுக்கப்பட்டது.

இரத்தினபுரி மாவட்டத்தின் திமியாவ பகுதியை இன்று பிற்பகல் ஒரு குழுவினர் சென்றடைந்தனர்.

கடினமான வீதிகளின் ஊடாக பயணித்த நிவாரணக் குழுவினர், படகு மூலம் திமியாவ பகுதியிலுள்ள முகாமிற்கு சென்று மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

களுகங்கையின் நீர் மட்டம் அதிகரித்தமையினால் சுமார் 90 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிவாரணங்களுடன் திமியாவ பகுதிக்கு முதன்முறை குழுவொன்று வந்துள்ளதாகத் தெரிவித்த மக்கள், அவர்களின் பிரச்சினைகளை நியூஸ்ஃபெஸ்ட் குழுவினரிடம் முன்வைத்தனர்.

இரத்தினபுரி தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர் உதய குமார மற்றும் உயிர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் நிவாரணக் குழுவினருக்கு நிவாரணங்களை பகிர்ந்தளிக்க உதவி செய்தனர்.

கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வெற்றிலையூர் லெவல தோட்டத்திலுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

லெவல 1 தோட்டத்தில் வசித்து வந்த மக்கள் மண்சரிவு அபாயம் காரணமாக நான்கு வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்து லெவல தோட்டத்தில் வசித்து வருகின்றனர்.

அதனையடுத்து, எத்துராப்பல மத்திய பிரிவில் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களைத் தேடி நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் சென்றனர்.

எத்துராப்பல கீழ் பிரிவில் வசித்து வந்த மக்கள் மண்சரிவு அபாயம் காரணமாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் எத்துராப்பல மத்திய பிரிவிற்கு சென்று அங்கு வசித்து வருகின்றனர்.

இதேவேளை, கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஒப்படைத்த நிவாரணப் பொருட்களின் ஒரு பகுதி நாவலப்பிட்டி பகுதியில் கடும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று பகிர்ந்தளிக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்