by Bella Dalima 24-05-2018 | 7:32 PM
Colombo (News 1st)
இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இரு நாட்டு அரசாங்கங்களும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளே இதற்கு காரணம் என கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் தினேஸ் பண்டார குறிப்பிட்டார்.
இலங்கை - இந்தியாவுடன் வரலாறு தொட்டு சமூக, கலாசார, வரத்தக ரீதியிலான நட்புறவை பேணி வருகின்றது.
எனினும், இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையிலான தீர்க்கப்படாத பிரச்சினை அண்மைக்காலமாக பல்வேறு கருத்து மோதல்களுக்கு வித்திட்டிருந்தது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மீண்டும் வாழ்க்கைத் தரத்தை கட்டியெழுப்புவதற்காக பாடுபடும் வட பகுதி மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலால் தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிலும் இலங்கை மீனவர்கள் இந்திய கடற்பரப்பிலும் கைது செய்யப்படுகின்றமை தொடர்கதையாக மாறியுள்ளது.
இரு நாடுகளின் அரசாங்கங்கள் மற்றும் மீனவர்கள் மட்டத்தில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றும் இன்று வரை இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை.
மாறாக, தமிழக அரசியல் தலைவர்கள் தமது வாக்கு வங்கியினை அதிகரித்துக் கொள்வதற்காக இந்தப் பிரச்சினையை அரசியல் மேடையில் பேசுபொருளாக மாற்றியுள்ளதையும் அவதானிக்க முடிகிறது.
இந்தப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இரு நாட்டு மீனவர் தலைவர்களினதும் நிலைப்பாடாகும்.
கடந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் குறித்த காலப் பகுதியில் இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 50 வீதத்திற்கும் மேற்பட்ட தொகையால் குறைவடைந்துள்ளது.
கடந்த வருடம் மே மாதம் வரையான காலப் பகுதியில் 123 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக கடற்படையின் பேச்சாளர் கமாண்டர் தினேஸ் பண்டார தெரிவித்தார்.
இந்த வருடம் குறித்தக் காலப் பகுதியில் அந்த எண்ணிக்கை 56 ஆக குறைவடைந்துள்ளது.
எவ்வாறாயினும், இந்திய மீனவர்கள் எவரும் தற்போது இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்படவில்லை என கடற்படை அறிவித்துள்ளது.