அர்ஜூன மகேந்திரன் சிங்கப்பூரில் உள்ளார் - INTERPOL

அர்ஜூன மகேந்திரன் சிங்கப்பூரில் தங்கியுள்ளார்: சர்வதேச பொலிஸார் உறுதிப்படுத்தல்

by Bella Dalima 24-05-2018 | 4:06 PM
Colombo (News 1st)  இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் சிங்கப்பூரில் தங்கியிருப்பதாக சர்வதேச பொலிஸார் (INTERPOL) உறுதிப்படுத்தியுள்ளனர். சர்வதேச பொலிஸின் சிங்கப்பூர் கிளை அதிகாரிகள் இந்த விடயத்தை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளது. மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சர்வதேச பொலிஸாருக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களை அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டார்.