சீரற்ற வானிலையால் 10 பேர் உயிரிழப்பு

சீரற்ற வானிலையால் 10 பேர் உயிரிழப்பு

by Staff Writer 23-05-2018 | 1:22 PM
COLOMBO (News 1st) 14 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 84, 943 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 27, 621 பேர் 194 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். இவர்களுக்கான நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இன்று இரவு முதல் தொடர்ச்சியாக மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் , தென் , சப்ரகமுவ , மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் பல பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை முதல் புத்தளம், கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனால் மீனவர்கள் மற்றும் கடற்றொழிலில் ஈடுபடுவோர் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் முல்லைத்தீவு ஒட்டுச்சுட்டானின் 72 மில்லிமீட்டர் வரையான அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. ஓமந்தை பகுதியில் 65 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் திருகோணமலையில் 72 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. இதேவேளை, களனி, களு மற்றும் கிங் கங்கை உள்ளிட்ட ஆறுகளின் நீர்மட்டம் படிப்படியாக குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் ஆய்வு பிரிவு பணிப்பாளர் மாலா அலவத்துவல தெரிவித்தார். இதேவேளை, 11 மாவட்டங்களுக்கு இரண்டாவது நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வு பிரிவின் சிரேஷ்ட புவியியலாளர் காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.