தமிழகஅரசிடம் விளக்கம்கோரியுள்ள மனிதஉரிமைகள் ஆணையம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: தமிழக அரசிடம் விளக்கம் கோரியுள்ள மனித உரிமைகள் ஆணையம்

by Bella Dalima 23-05-2018 | 3:48 PM
தமிழகத்தின் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய கிராம மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கு விளக்கமளிக்குமாறு தமிழக அரசை மனித உரிமைகள் ஆணையம் கோரியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய கிராம மக்கள் மீது பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாடசாலை மாணவி உட்பட 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதையும் உலுக்கியுள்ளது. தங்களது வாழ்வாதாரத்திற்காக போராடிய மக்கள் மீது இப்படியொரு துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டமை தமிழக மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்தப்பட்டது ஏன் என்றும், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியானவர்கள் குறித்தும் இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதேவேளை, தூத்துக்குடி அண்ணா நகரில் போராட்டக்காரர்கள் மீது பொலிசார் இன்று மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதாகவும் ஐவர் காயமடைந்துள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் தகவல் வௌியிட்டுள்ளன. அண்ணா நகர் பகுதியில் பொலிசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதால் அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிய பொலிசார், துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு மற்றும் உயிரிழப்பு சம்பவங்களால் தூத்துக்குடி - அண்ணாநகர் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.