by Bella Dalima 23-05-2018 | 6:51 PM
Colombo (News 1st)
வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளமை தொடர்பில் அடுத்த சம்பளப் பேச்சுவார்த்தையின் போது அரசியல்வாதிகள் கவனம் செலுத்த வேண்டும் என தோட்டத்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலான கூட்டு ஒப்பந்தம் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.
கூட்டு ஒப்பந்தத்தின்படி தொழிலாளர்களுக்கான சம்பள முறைமை, அடிப்படைச் சம்பளம் 500 ரூபாவாகவும் உற்பத்திக் கொடுப்பனவு 140 ரூபாவாகவும் தேயிலை விலைக்கொடுப்பனவு 30 ரூபாவாகவும் வருகைக் கொடுப்பனவு 60 ரூபாவாகவும் உள்ளது.
மொத்த சம்பளம் 730 ரூபாவாகக் காணப்படுகின்றது.
இதனைத்தவிர, மேலதிகமாகப் பறிக்கப்படும் ஒவ்வொரு கிலோகிராம் கொழுந்திற்கும் 25 ரூபா வழங்கப்படும் என கூட்டு ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், உற்பத்தி கொடுப்பனவான 140 ரூபாவை பெறுவதாயின் 18 கிலோகிராம் கொழுந்து பறிக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென தோட்டத்தொழிலாளர்கள் தெரிவித்திருந்தனர்.
இரண்டு வருடங்களின் பின்னர் மீண்டும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டும்.
இந்த பின்புலத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மீண்டும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டியுள்ளது.
பொருட்களின் விலையேற்றத்தினால் தாம் பெரும் துயரங்களை எதிர்கொண்டுள்ளமையினால் அது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் சிந்திக்க வேண்டும் என தோட்டத்தொழிலாளர்கள் தெரிவித்தனர்.