வீடமைப்புத் திட்டத்தில் குளறுபடிகள்

மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில் குளறுபடிகள்

by Bella Dalima 23-05-2018 | 9:06 PM
Colombo (News 1st) தெஹியோவிட்ட - டெனிஸ்வத்த தோட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 48 வீடுகளுக்கான நிர்மாணப் பணிகளில் குளறுபடிகள் இடம்பெற்றுள்ளன. 2016 ஆம் ஆண்டு மே மாதம் தெஹியோவிட்ட - டெனிஸ்வத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் மூவர் உயிரிழந்தனர். இதன் பின்னர் அங்கிருந்த 48 குடும்பங்களுக்காக தோட்டத்தில் 48 வீடுகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், இந்த வீடுகள் எப்போது உடைந்து வீழும் என்ற அபாயம் நிலவுகின்றமை தொடர்பில் நேற்று (22) செய்தி வௌியிட்டிருந்தது. காணி தெரிவு மற்றும் உரிய வடிகாண் கட்டமைப்பு இன்றி திட்டமிடாமல் இந்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளமை இதன் மூலம் தௌிவாகின்றது. பாதுகாப்பற்ற இந்த புதிய வீடுகளில் தங்க முடியாமையினால் தோட்டத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலைக்கு அருகில் சிறிய கொட்டில்களை அமைந்து கடந்த இரண்டு வருடங்களாக இந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மக்கள் பணத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த வீடமைப்பு திட்டத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளுக்கு யார் பொறுப்புக்கூறுவது? தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் பெருந்தோட்ட மனித அபிவிருத்தி ஸ்தாபனம் மூலமே இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பெருந்தோட்ட மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் கேகாலை மாவட்ட பணிப்பாளர் P.V.U. ரணசிங்கவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. தமது மேற்பார்வையில் இந்த வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டாலும், இடம்பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தாம் பொறுப்பல்ல என அவர் குறிப்பிட்டார். வீடமைப்புத் திட்டத்தை வகுத்து மேற்பார்வை செய்வது மாத்திரமே தமது பொறுப்பு என அவர் குறிப்பிட்டார் எனவே, இதற்கு தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சே பொறுப்புக்கூற வேண்டும் என கேகாலை மாவட்ட பெருந்தோட்ட மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் பணிப்பாளர் தெரிவித்தார். தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் மலை நாட்டு புதிய கிராமங்கள் அமைச்சிடம் இது தொடர்பில் வினவிய போது, தமது அமைச்சின் கீழ் இயங்கும் பெருந்தோட்ட மனித அபிவிருத்தி ஸ்தாபனமே இதற்கு முழுமையாக பொறுப்புக்கூற வேண்டும் என அமைச்சின் செயலாளர் ரஞ்சனி நடராஜப்பிள்ளை தெரிவித்தார். ​தோட்டங்களில் வீடுகளை அமைக்கும் போது நிர்மாணப் பணிகளின் தரத்தைப் பார்த்தே தமது அமைச்சு கட்டம் கட்டமாக நிதி வழங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். தெஹியோவிட்ட - டெனிஸ்வத்த தோட்டத்தின் வீடமைப்பு திட்டத்தில் காணப்படும் தரக்குறைவு தொடர்பிலான முறைப்பாடுகள் கிடைத்தமையினால் தமது அமைச்சு இது வரை அந்த திட்டத்திற்கு நிதி வழங்கவில்லையென அவர் தெரிவித்தார். எனவே, இது குறித்து மேலும் நன்கு ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் மலை நாட்டு புதிய கிராமங்கள் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.