40,491 பேர் தற்காலிக நலன்புரி முகாம்களில்

சுமார் 40,491 பேர் தற்காலிக நலன்புரி முகாம்களில் தங்கியுள்ளனர்

by Bella Dalima 23-05-2018 | 9:20 PM
Colombo (News 1st)  சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட சுமார் 40,491 பேர் தற்காலிக நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டது. மகாவலி கங்கை பெருக்கெடுத்தமை மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக நாவலப்பிட்டி - பெனிகொடமுல்ல பகுதியில் இருந்து 12 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வௌியேற்றப்பட்டனர். இவ்வாறு வௌியேற்றப்பட்ட 54 பேர், நாவலப்பிட்டி - வேலும்வனாராமய விஹாரையில் கடந்த மூன்று நாட்களாகத் தங்கியுள்ளனர். நாவலப்பிட்டி - சொய்சாகல பகுதியில் இருந்து நேற்று முன்தினம் (21) வௌியேற்றப்பட்ட நகர சபை ஊழியர்கள் தொடர்ந்தும் நாவலப்பிட்டி நகர சபை மண்டபத்தில் தங்கியுள்ளனர். மண்சரிவினால் 6 வீடுகள் சேதமடைந்ததை அடுத்து, 12 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் குடியிருப்புகளில் இருந்து வௌியேற்றப்பட்டனர். மண்சரிவு அபாயம் காரணமாக ரம்பொடை - வெதமுல்ல - லில்லிஇஸ்லேன் தோட்டத்தைச் சேர்ந்த 105 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 340 பேர் குடியிருப்புகளில் இருந்து வௌியேறியுள்ளனர். நேற்றிரவு முன்தினம் முதல் ரம்பொடை இந்துக்கல்லூரியில் இவர்கள் தங்கியுள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவுகள் பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்படுகின்றன. கற்பாறைகள் சரிந்து வீழும் அபாயம் காரணமாக வேவண்டன் - தவலந்தென்ன பகுதியைச் சேர்ந்த சுமார் 30 குடும்பங்கள், இரவில் மாத்திரம் வேவண்டன் தமிழ் வித்தியாலயத்தில் தங்கி வருகின்றனர். மஸ்கெலியா - சாமிமலை - மொக்கா தோட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த கடும் மழையை அடுத்து மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் 8 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் அங்கிருந்து வௌியேற்றப்பட்டு, மொக்கா தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மண்சரிவை அடுத்து, மொக்கா தோட்டத்திலுள்ள குடியிருப்புகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் கூறினார். குடியிருப்புகள் உடைந்து வீழும் அபாயம் நிலவுவதன் காரணமாக கேகாலை - புலத்கொஹூபிட்டிய - லெவல தோட்ட மேற்பிரிவிலுள்ள இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் நேற்று அங்கிருந்து வௌியேற்றப்பட்டனர். இவர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். கண்டி - அக்குரணை - நீரெல்ல குடியிருப்புக்கு மேலாக பாரிய கல்லொன்று காணப்படுகின்றது. இந்தக் கல் சரிந்து வீழும் அபாயம் நிலவுவதால், 9 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர் அங்கிருந்து வௌியேற்றப்பட்டுள்ளனர்.