உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரிப்பு

சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரிப்பு

by Bella Dalima 23-05-2018 | 8:11 PM
Colombo (News 1st)  18 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. ஒரு இலட்சத்து 5,352 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். சீரற்ற வானிலையால் லிந்துலை நகரை அண்மித்த பகுதியிலுள்ள சில வீடுகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது அவற்றில் மூன்று வீடுகள் தாழிறங்கியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் கூறினார். 10 குடும்பங்களைச் சேர்ந்த 65 பேர் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், செல்வதற்கு வேறு இடமின்றி குறித்த வீடுகளிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஹப்புத்தளை - கல்கந்த பகுதியிலுள்ள 25 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மண்சரிவு அபாயத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலத்த மழையை அடுத்து குடியிருப்புகளுக்குள் வௌ்ளம் புகுந்துள்ளதுடன், மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, பதுளை - பண்டாரவளை பிரதான வீதியின் பிந்துனுவெவ குறுக்கு வீதி உள்ளிட்ட சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. தெனியாய - அனில்கந்த பிரதேசத்தில் தொடர் குடியிருப்பொன்றின் மதில் இடிந்து வீழ்ந்துள்ளது. இதனால் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம் மாவட்டத்தின் தாழ்நிலப்பகுதிகள் தொடர்ந்தும் நீரில் மூழ்கியுள்ளதுடன், இன்று காலை முதல் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் கூறினார். இதேவேளை, முந்தல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பகுதிகளில் வௌ்ள நீரை வௌியேற்றும் நடவடிக்கைகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. சீரற்ற வானிலையை அடுத்து, திருகோணமலை - கோணலிங்கம் வித்தியாலயத்தின் மதில் இடிந்து வீழ்ந்துள்ளது. மழை நீர் புகுந்ததால் பாடசாலையிலிருந்த ஆவணங்கள் சில சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் - கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் இன்று நண்பகல் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால், இராஜகோபுரத்திலிருந்த பாவையொன்று உடைந்து வீழ்ந்துள்ளது.