கர்நாடக முதல்வராக H.D. குமாரசுவாமி பதவிப்பிரமாணம்

கர்நாடக முதல்வராக H.D. குமாரசுவாமி பதவிப்பிரமாணம்

by Bella Dalima 23-05-2018 | 6:00 PM
கர்நாடகா மாநிலத்தின் 24 ஆவது முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மாநில தலைவர் H.D. குமாரசுவாமி இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். கர்நாடக மாநில ஆளுநர் வஜூபாய் வாலா அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, துணை முதல்வராக காங்கிரஸ் கட்சியின் பரமேஸ்வரா பதவியேற்றுள்ளார். பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி 104 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 78 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 38 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இந்த நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இணைந்து ஆட்சியமைக்க தீர்மானித்த போதிலும் மாநில ஆளுநர் அதற்கு இணங்கவில்லை. இதனையடுத்து, பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். தமது கோரிக்கையை பரிசீலிக்காது ஆட்சியமைப்பதற்கான சந்தர்ப்பத்தை பாரதிய ஜனதாக் கட்சிக்கு வழங்கிய ஆளுநரின் தீர்ப்பினை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளினால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உச்சநீதிமன்றத்தால் எடியூரப்பாவிற்கு உத்தரவிடப்பட்டது. சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னரே தமது முதல்வர் பதவியை எடியூரப்பா இராஜினாமா செய்தார். இதனையடுத்து, மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மாநில தலைவர் H.D.குமாரசுவாமி, காங்கிரஸ் ஆதரவுடன் மாநிலத்தின் முதல்வராக இன்று பதவியேற்றுள்ளார். எவ்வாறாயினும், பதவியேற்றதிலிருந்து 15 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தால் குமாரசுவாமிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.