IPL இறுதிப்போட்டிக்கு சென்னை சுப்பர் கிங்ஸ் தகுதி

ஐ.பி.எல் இறுதிப்போட்டிக்கு சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நேரடியாக தகுதி

by Staff Writer 23-05-2018 | 11:33 AM
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நேரடியாக தகுதிபெற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற ப்ளே ஒப் சுற்றின் முதலாவது போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியை 2 விக்கெட்டுக்களினால் வெற்றிகொண்ட சென்னை அணி இறுதிசுற்றுக்குள் நுழைந்துள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்களை பெற்றது. ஓட்டங்கள் ஏதேனும் பெறப்படாத நிலையில் அணியின் முதலாவது விக்கெட் வீழ்த்தப்பட்டதுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ஷிகர் தவான் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார். Carlos Brathwaite அதிகபட்சமாக 43 ஓட்டங்களை பெற்றதுடன் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் மற்றும் யூசுப் பத்தான் ஆகியோர் தலா 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். Dwayne Bravo இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 140 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலளித்தாடிய சென்னை சுப்பர்கிங்ஸ் அணி பெப் டுப்லெசிசிஸ் அதிரடி ஆட்டம் கைகொடுக்க வெற்றியை தம்வசப்படுத்திக்கொண்டது. சென்னை அணியின் முதலாவது விக்கெட்டும் ஓட்டங்களின்றிய நிலையில் வீழ்த்தப்பட்டது. எனினும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய டுப்லெசிஸ் இறுதி வரை களத்தில் நின்று ஆட்டமிழக்காமல் 67 ஓட்டங்களை விளாசினார். சன்ரைசஸ் அணி பந்துவீச்சில் சென்னை அணியை கட்டுப்படுத்தியதுடன் அணியின் ஏனைய வீரர்கள் மிகக்குறைவான ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்யப்பட்டனர். பந்துவீச்சில் சந்தீப் ஷர்மா, சித்தார்த் காவுல் மற்றும் ரஷீட் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர். ஐ.பி.எல் தொடரின் ப்ளே ஒப் சுற்றின் இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த ​போட்டியில் வெற்றிபெறும் அணி சன்ரைசஸ் ஹைதராபாத் அணியுடன் மற்றுமொரு போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளதுடன் இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்ளும். இதேவேளை, இன்றைய போட்டியில் தோல்வியடையும் அணி தொடரில் இருந்து வௌியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.