மலேசிய அமைச்சர்களுக்கான கொடுப்பனவுகள் குறைப்பு 

அமைச்சர்களுக்கான கொடுப்பனவுகளைக் குறைப்பதாக மலேசியப் பிரதமர் அறிவிப்பு

by Bella Dalima 23-05-2018 | 6:17 PM
மலேசியாவில் அமைச்சர்களுக்கான கொடுப்பனவுகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் 10 வீதத்தால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் மஹதிர் மொஹம்மட் அறிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முதல் முன்னெடுப்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். நாட்டின் பிரதமராக பதவியேற்று முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் புத்ரஜயாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் கடன் சுமை 250 பில்லியன் டொலர்களாகக் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தத் தொகை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 65 சதவீதம் எனவும் பிரதமர் மஹதிர் மொஹம்மட் சுட்டிக்காட்டியுள்ளார். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 55 வீத கடன் தொகையை தமது அரசாங்கம் செலுத்தியுள்ளதாக முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து அரச ஊழியர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பதாக முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நஜீப் ரசாக் தேர்தலில் தோல்வியடைந்துள்ளமையினால் அவர் வழங்கிய தேர்தல் வாக்குறுதி தொடர்பில் தாம் கவனம் செலுத்துவதாகவும் பிரதமர் மஹதிர் மொஹம்மட் கூறியுள்ளார். அரசாங்க செலவீனங்களைக் குறைப்பதற்காக அரச ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக மஹதிர் மொஹம்மட் தெரிவித்துள்ளார். இதேவேளை, கடந்த அரசாங்கத்தின் கீழ் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் மற்றும் திட்டங்கள் கைவிடப்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.