அனர்த்தங்களில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு

மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

by Staff Writer 22-05-2018 | 2:36 PM
COLOMBO (News 1st) மழையுடன் கூடிய அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. மின்னல் தாக்கங்களினாலேயே அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. சீரற்ற வானிலையினால் 14 மாவட்டங்களைச் சேர்ந்த, 68,000 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெதமுல்ல - லல்லிஸ்லேண்ட் தோட்டத்தில் வௌ்ள அபாயத்தினால் 105 குடும்பங்கள் இருப்பிடங்களிலிருந்து வௌியேறியுள்ளனர். அப்பகுதியில் தொடர்ந்தும் 3 தடவைகள் வௌ்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது பெய்து வரும் மழை காரணமாக மீண்டும் வௌ்ளம் ஏற்படும் என மக்கள் அச்சம் வௌியிட்டுள்ளனர். இதனையடுத்து 105 குடும்பங்களைச் சேர்ந்த 340 பேர் இறம்பொடை இந்து கல்லூரியில் தங்கியுள்ளனர். இதேவேளை மொனராகலையில் உப்பனவௌி தோட்டத்தில் ஏற்பட்டுள்ள வௌ்ளத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு இதுவரை நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர். கொட்டகலை ரொக்ஹில் தோட்டத்தில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் உறவினர்களின் வீடுகிளில் தங்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மண்சரிவினால் பாதிக்கப்பட்ட தலவாக்கலை மிடில்டன் தோட்டத்தில் வீடொன்றின் மீது கற்பாறை சரிந்து வீழ்ந்துள்ளன. டயகம ஸடார் பிரிவில் மண்சரிவினால் 2 வீடுகள் சேதமடைந்துள்ளன. நாவலபிட்டிய - பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவிற்குட்ப்டட சுமார் 121 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பள்ளிவாசல் , விகாரைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கித்துல் கொட, பவ்வாகம, வெலிகம்பல போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.பிரதேச செயலகம் இவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். கேகாலை கண்ணத்தோட்டை கிராமமும் நேற்று நீரில் மூழ்கியது, தற்போது பிரதேசத்தின் நீர் வடிந்தோடுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இரத்தினபுரி மாவட்டத்தில் 10 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 3980 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டத்தின் செயலாளர் மாலினி லொகுபோத்தாகம தெரிவித்துள்ளார். இந்நிலையில் இரத்தினபுரி கொலன்ன லங்கா பெரிய தோட்டத்தைச் சேர்ந்த 25 குடும்பங்கள் அங்கிருந்து வௌியெறி பிரதேச சிறுவர் பராமரிப்பு நிலையமொன்றில் தங்கியுள்ளனர்.மண்சரிவு அபாயம் காரணமாக அவர்கள் வௌியேறியுள்ளனர். மாத்தறை மாவட்டத்தில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் பிரதீப் ரத்னாய்க்க குறிப்பிட்டுள்ளார். பதுளை மாவட்டத்தில் ஹப்புத்தளை பிரதேச செயலாளர் பிரிவில் மண்சரிவு அபாயமுள்ளதால், 53 குடும்பங்களைச் சேர்ந்த 207 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்டத்தின் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மழையினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தில் சுமார் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளார் யு.டி.சி ஜயலால் தெரிவித்துள்ளார். https://www.youtube.com/watch?v=tlhwuklhmvQ