அமெரிக்காவின் அறிவிப்பிற்கு ஈரான் கண்டனம்

பொருளாதாரத் தடைகளை விதிக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்தமைக்கு ஈரான் கண்டனம்

by Staff Writer 22-05-2018 | 10:21 AM
ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்தமைக்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரானுடன் கடந்த 2015 ஆம் ஆண்டு மேற்குலக நாடுகள் மற்றும் அமெரிக்கா கைச்சாத்திட்ட சர்வதேச அணுவாயுத ஒப்பந்தம் கடந்த 12 ஆம் திகதியுடன் முடிவுற்ற நிலையில் அதிலிருந்து அமெரிக்கா விலகியது. இந்நிலையில் ஈரான் மீது வரலாறு காணாத கடுமையான தடைகளை விதிக்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பெயோ தெரிவித்துள்ளார். பொருளாதார தடைகள் அமுல்படுத்தப்பட்ட பின்னர், ஈரான், தமது பொருளாதார நிலையை ஸ்திரமாக பேணுவதற்கு போராடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பிலான ஈரானின் எதிர்ப்பு நடவடிக்கைகளை சமாளிக்க அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பிராந்திய நாடுகளுடன் இணைந்து செயலாற்றவுள்ளதாக Mike Pompeo தெரிவித்துள்ளார். இதனிடையே அமெரிக்கா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கான பின்விளைவுகளை அந்நாடு விரைவில் சந்திக்கும் என ஈரான் வௌிவிவகார அமைச்சர் ஜவாட் ஸாரிவ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் குறித்த அறிவிப்பினை அடுத்து , ஐரோப்பிய ஒன்றியத்தின் வௌிவிவகார தலைமை அதிகாரி கண்டனம் வௌியிட்டுள்ளார். ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிய போதிலும் அதற்கு மாற்றீடாக எந்தவொரு நடவடிக்கைகளையும் அமெரிக்க ஜனாதிபதி முன்னெடுக்கவில்லை என ஐரோப்பிய ஒன்றியத்தின் வௌிவிவகார தலைமை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.