பாடசாலைகளை பாதுகாக்கும் செயற்திட்டம்

பாடசாலைகளை பாதுகாக்கும் செயற்திட்டமொன்றை முன்னெடுக்க கல்வியமைச்சு தீர்மானம்

by Staff Writer 22-05-2018 | 8:33 AM
COLOMBO  (News 1st) அவசர அனர்த்த நிலைமைகளை கருத்திற் கொண்டு பாடசாலைகளை பாதுகாக்கும் செயற்றிட்டமொன்றை முன்னெடுப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. நீண்டகால செயற்றிட்டமாக பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மற்றும் பாடசாலையை பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கு இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டார். இதன் முதற்கட்டமாக கல்வியமைச்சினால் வௌ்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் நிலவும் பகுதிகளில் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் தொடர்பில் ஆலோசனைகள் அடங்கிய கையேடுகள் நாடளாவிய ரீதியில் சகல அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்களை அறிவுறுத்துமாறு அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். வானிலை மாற்றம் காரணமாக எதிர்பாராத விதமாக பாடசாலை மாணவர்கள் அனர்த்தங்களுக்கு உட்படுதல் மற்றும் புத்தகங்கள் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்கள் வௌ்ளத்திற்குட்படுவதைத் தடுக்கும் விதத்தில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது. இதேவேளை வௌ்ளம் மற்றும் மண்சரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள பாடசாலைகளை நடத்துவது அல்லது நடத்தாதிருப்பது தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை தென் மாகாணத்தின் சகல முன்பள்ளிகளும் இன்றிலிருந்து திங்கட் கிழமை வரை மூடப்படவுள்ளன. பிரதேசத்தில் பரவியுள்ள வைரஸ் தொற்று தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வியமைச்சர் சந்திமா ராசபுத்ர தெரிவித்தார்.  

ஏனைய செய்திகள்