சீரற்றவானிலையால் 20,000இற்கும் அதிகமானோர் பாதிப்பு

சீரற்ற வானிலையால் 20,000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு

by Staff Writer 22-05-2018 | 8:12 AM
COLOMBO (News 1st) சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட சுமார் 1500 பேர், 30 இற்கும் மேற்பட்ட பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, நுவரெலியா, மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளை அண்மித்துள்ள முகாம்களில் இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார். வௌ்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக குறித்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பலத்த மழையுடனான வானிலையால்,இதுவரை 20,000 அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை நிலவும் மழையுடனான வானிலையால், இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை மற்றும் மற்றும் கண்டி ஆகிய 5 மாவட்டங்களின் 15 பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, குருவிட்ட எலபாத்த இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அயமக, பெல்மடுல்ல, கலவான, கஹவத்த கொலன்ன, ஓபநாயக்க, கிரயெல்ல, பலாங்கொட, நிவித்திகல. கொடக்கவெல ஆகிய பகுதிகளுக்கு இரண்டாம் இலக்கத்திற்கான மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்ப்டடுள்ளது. கேகாலை மாவட்டத்தில், தெரணியகல, புலத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரனாயக்க, யட்டியந்தோட்டை, மாவனெல்ல,கேகாலை மற்றும் கலிகம ஆகிய பகுதிகளுக்கு இரண்டாம் இலக்க மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இறம்புக்கனை மற்றும் வரக்காபொல ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், கொத்மலை மற்றும் நுவரெலியா பிரதேச செயலாளர் பிரிவுகளில் இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தின் ஹல்தமுல்ல பிரதேச செயலாளர் பிரிவிற்கு மஞ்சள் எச்சரிக்கையும், கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கங்க இஹல கோரளை மற்றும் உடபலாத்த, தொழுவ பிரதெச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு எசச்ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாத்தளை மாவட்டத்தில் இறத்தொட்ட , உக்குவெல பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் காலி மாவட்டத்தின் எல்பிட்டிய, நாகொட, நெலுவ, தவலம, ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்க பகுதிக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மண்மேடு சரிந்து விழும் அபாயம் உள்ளதாகவும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. இதேவேளை மகாவலி நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வான்மட்டத்தை அண்மித்துள்ளது. அதிக மழை வீழ்ச்சியை தொடரந்து மகாவலி நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வான்மட்டத்தை அண்மித்துள்ளது. இம்முறை நூற்றுக்கு நூறு வீதம் பெரும்போக செய்கையை மேற்கொள்ள தேவைப்படும் நீரை விநியோகிப்பதற்கு எதிர்பார்ப்பதாக மகாவலி பணிப்பாளர் நாயகம் சரத் சந்திரசிறி தெரிவித்தார். இதற்கு முன்னர் நூற்றுக்கு 60 வீதம் செய்கை எதிர்பார்க்கப்பட்டிருந்ததாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். அதிக மழை வீழ்ச்சி பதிவானதையடுத்து இந்நாட்களில் வயல்களை செய்கைக்காக தயார்படுத்துமாறு விவசாயிகளிடம் அவர் கோரியுள்ளார்.