சீரற்ற வானிலையால் புத்தளம் அதிகளவில் பாதிப்பு

சீரற்ற வானிலையால் புத்தளம் மாவட்டம் அதிகளவில் பாதிப்பு

by Staff Writer 22-05-2018 | 8:12 PM
COLOMBO (News 1st) சீரற்ற வானிலையால் புத்தளம் மாவட்டமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. வௌ்ளம் காரணமாக மாதம்பே - பொதுவில பகுதியில் வீடுகளுக்குள் அகப்பட்டிருந்த மக்க​ளை கடற்படையினரின் தலையீட்டுடன் மீட்கும் நடவடிக்கைகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டன. நேற்று பகல் முதல் தொழிற்பயிற்சி நிலையம் ஒன்றில் அகப்பட்டிருந்த விசேட தேவையுடைய பிள்ளைகள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 28 பேர் பாதுகாப்புப் பிரிவினரின் தலையீட்டுடன் இதன் போது மீட்கப்பட்டனர். இதேவேளை மாதம்பே - குளியாப்பிட்டி பிரதான வீதியில் பொதுவில் பகுதி நீரில் மூழ்கியிருந்ததுடன், சிலாபம் - கொழும்பு பிரதான வீதியின் மாதம்பே பகுதி நீரில் மூழ்கியது. தப்போவ நீர்தேக்கத்திற்கு நீர் கொண்டுவரப்படும் ரந்தவிபெதி எல இரண்டு இடங்களில் உடைப்பெடுத்துள்ளது. இதனால் 80 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. பெருக்கெடுத்த நீர் சேகரிக்கப்பட்ட தெவலகந்த வாவியின் அணைக்கட்டு பாதுகாப்பற்ற நிலையில் தற்போது காணப்படுகின்றது. அணைக்கட்டு உடைப்பெடுத்ததனை தடுப்பதற்காக நீர் வழிந்தோடும் பகுதியை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் பொது மக்கள் ஈடுபட்டனர். களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினால் தாழ் நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. மல்வானை நகரம் இன்று நண்பகல் நீரில் மூழ்கியிருந்ததுடன் கம்பஹா - கடுவல வீதி மற்றும் பியகம - சியம்பலாபே ஆகிய பகுதிகளில் வீதிகளின் போக்குவரத்து தடைப்பட்டிருந்தன. இதேவேளை களனிமுல்ல மற்றும் களனிய பெதியாகொட பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. பேலியகொட மீன் சந்தை கட்டடத் தொகுதியை அண்மித்த பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. சீதவாக்க கங்கை பெருக்கெடுத்துள்ளமையினால் அவிசாவளை - நுகேவத்தை பிரதேசத்தின் பல வீடுகள் தொடர்ந்தும் நீரில் மூழ்கியுள்ளன. ​ குக்குளே கங்கை பெருக்கெடுத்துள்ளமையினால் புலத்சிங்கள , மோல்காவ, பரகொட ஆகிய பகுதிகள் தொடர்ந்தும் நீரில் மூழ்கியுள்ளன. இடம்பெயர்ந்த 10 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேர் மொக்காவ கனிஷ்ட வித்தியாலத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மத்திய அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகள் காரணமாக மாஓயாவிற்கு நீர் வழிந்தோடாமையினால் பயிர் நிலங்களும் வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. களுகுளு ஓயா பெருக்கெடுத்தமையினால் குருநாகல் - தும்மலசூரிய பிரதேசத்தின் பல வீடுகள் தொடர்ந்தும் நீரில் மூழ்கியுள்ளன. பலத்தை மழையை அடுத்து நில்வளா கங்கை பெருக்கெடுத்துள்ளமையினால் அக்குரஸ்ஸ - சியம்பலாகொட வீதி தொடர்ந்தும் நீரில் மூழ்கியுள்ளது. அக்குரஸ்ஸ ,பலகாவெல , பிட்ட பெத்தர , கொடிகந்த ஆகிய பகுதிகளும் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன. பாதிக்கப்படட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இன்று அழைத்துச் செல்லப்பட்டன. காலி - நாகொட பிரதேசத்தின் பல வீதிகள் தொடர்ந்தும் நீரில் மூழ்கியுள்ளன. அகலிய குட்டியாவத்தை பிரதேசத்தில் வௌ்ளத்தில் அகப்பட்டிருந்தவர்கள் வள்ளம் ஊடாக காப்பற்றபட்டிருந்தனர் பத்தேகம - கனேகொட நீர் வழங்கல் சபைக்கு சொந்தமான நீர் இறைக்கும் நிலையம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகள் நீரில் மூழ்கியிருந்தன. காலி - வக்குவெல்ல பாலத்தில் கற்கள் அடைப்புக்குள்ளாவதனை தடுப்பதற்கான செயற்பாடுகள் தெற்கு கடற்படை முகாமின் சுழியோடிகள் ஊடாக இன்று முன்னெடுக்கப்பட்டன. https://www.youtube.com/watch?v=2V_x8O8UkNg