20 திருத்தம்:தனிநபர் பிரேரணையாக சமர்ப்பிக்கப்படும்

20 ஆவது அரசியலமைப்புத் திருத்த யோசனை தனிநபர் பிரேரணையாக சமர்ப்பிக்கப்படவுள்ளது

by Bella Dalima 20-05-2018 | 4:21 PM
Colombo (News 1st)  நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இரத்து செய்யும் 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த யோசனை, தனிநபர் பிரேரணையாக அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். யோசனைத் திட்டமானது அடுத்த வாரமளவில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். மக்களால் தெரிவு செய்யப்படும் நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்குப் பதிலாக, பாராளுமன்றமே ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும் என்பது பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயமாகும். 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும், 2020 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதிக்கு பின்னரே அது நடைமுறைக்கு வரும் என்பதே மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடாகும். தற்போதைய பாராளுமன்றம் அதன்போது கலைக்கப்படுவதுடன், புதிய பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி அரச தலைவரே தவிர அவர் அரசாங்கத்தின் தலைவராக செயற்பட மாட்டார் என திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு நியமிக்கப்படும் ஜனாதிபதி அமைச்சுப் பொறுப்பை வகிக்க முடியாது என்பதுடன், அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கெடுக்கவோ அமைச்சரவைக்கு தலைமை தாங்கவோ மாட்டார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அமைச்சரவையின் தீர்மானங்களை அறிந்துகொள்வதற்கும் பிரேரணைகளை முன்வைப்பதற்கும் உரித்துடையவராவார் என்ற யோசனையும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 13 ஆவது திருத்தத்தின் படி, ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் எவையும் மாற்றமடையாது என்பதுடன், ஆளுநர்களை நியமித்தல், நீக்குதல், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களும் அவ்வாறே நீடிக்கும். ஜனாதிபதியின் தீர்மானத்திற்கேற்ப பாராளுமன்ற அமர்வை ஒத்திவைக்கும் அதிகாரம் இரத்து செய்யப்பட வேண்டும் எனவும் உத்தேச திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.