நாட்டை மீண்டும் பின்நோக்கிக் கொண்டு செல்ல கோட்டாபய முயற்சி: மங்கள குற்றச்சாட்டு
by Bella Dalima 20-05-2018 | 9:27 PM
Colombo (News 1st)
நாட்டின் தற்போதைய பொருளாதாரத்தைப் பாதிக்கும் விடயங்கள், கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை நினைவுபடுத்தி நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இன்று ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
இந்த அறிக்கையில் 16 முக்கிய விடயங்கள் அடங்கியுள்ளன.
கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை சுட்டிக்காட்டும் அமைச்சர் மங்கள சமரவீர, நாட்டை மீண்டும் பின்நோக்கிக் கொண்டு செல்வதற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக நீதிமன்றத்திலும் பொலிஸிலும் பல விசாரணைகள் தற்போதும் இடம்பெற்று வருவதாக அமைச்சர் மங்கள சமரவீர இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவற்றில்
01. ஊழல்மிகு மிக் கொடுக்கல் வாங்கல்02. அரச செலவில் பெற்றோருக்கான நினைவுத்தூபியை அமைத்தமை03. ஊடகவியலாளர்களைத் தாக்கியமை மற்றும் காணாமல் ஆக்கியமை04. மோசடிகள் மற்றும் வன்செயல்களை உருவாக்கியமை 05. சட்டவிரோதமாக ஆயுதங்களைக் களஞ்சியப்படுத்தி அரசாங்கத்திற்குக் கிடைக்க வேண்டிய வருமானத்தை இழக்கச்செய்தமை
போன்ற குற்றச்சாட்டுகள் ராஜபக்ஸ குடும்பத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டு அது தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வரும் பின்புலத்தில், மக்களைத் திசை திருப்பும் வகையில் மீண்டும் அதிகாரத்திற்கு வரும் நோக்கில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் செயற்பட்டு வருவதாக மங்கள சமரவீர விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் கடன் சுமை மற்றும் பொருளாதார ரீதியில் அரசாங்கம் எதிர்கொண்ட சவால்கள் தொடர்பில் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தை விட தற்போதைய அரசாங்கம் பொருளாதார ரீதியிலும் நிர்வாக ரீதியிலும் உறுதியாக இருப்பதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1990ஆம் ஆண்டு மொத்த தேசிய உற்பத்தி 30 வீதமாகக் காணப்பட்டதுடன், இலங்கையில் ஏற்றுமதி வருமானம் 2014ஆம் ஆண்டாகும் போது 12 வீதமாகக் குறைவடைந்து காணப்பட்ட சூழ்நிலையிலேயே தமது அரசாங்கம் நாட்டைப் பொறுப்பேற்றதாக மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தவணையை அடுத்த வருடம் செலுத்த வேண்டியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சுமத்தும் குற்றச்சாட்டு தொடர்பிலும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அறிவு மற்றும் சிந்தனை இல்லாமற்போயுள்ளமை தெரிவதாக மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
1948 ஆம் ஆண்டின் பின்னர் 2018 ஆம் ஆண்டு அதிகளவில் வௌிநாட்டுக் கடன்கள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் பெறுமதி 2845 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவற்றில் 1789 மில்லியன் 2011ஆம் ஆண்டிற்கு முன்னர் பெற்றுக்கொண்ட கடன் எனவும் 2015ஆம் ஆண்டிற்குப் பின்னர் பெறப்பட்ட கடனுக்காக 1056 மில்லியன்அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு 4285 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்த வேண்டியுள்ளதாகவும் அதில் 3315 மில்லியன் அமெரிக்க டொலர்
அதாவது 77 வீதம் ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் பெறப்பட்ட கடன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு செலுத்த வேண்டிய கடன் தவணையில் 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் திகதி 6 வீத வட்டியில் பெற்றுக் கொண்ட ஐந்து வருட கடனுக்காக 1000 மில்லியன் அமெரிக்க டொலரையும் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் திகதி 5.1 வீத வட்டியில் பெற்றுக்கொண்ட ஐந்து வருட கடனுக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலரையும் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பெற்றுக்கொண்ட கடனின் தவணை மற்றும் வட்டி அடங்கலாக 2020ஆம் ஆண்டு மூவாயிரத்து 768 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்த வேண்டியுள்ளதாகவும் அதில் 77 வீதம் அதாவது 2905 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் 2015ஆம் ஆண்டிற்கு முன்னர் பெறப்பட்டது எனவும் இந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டாகும்போது, செலுத்த வேண்டிய வௌிநாட்டுக் கடன்களில் 83 வீதம் 2015ஆம் ஆண்டிற்கு முன்னர் பெற்றுக்கொண்ட கடன் எனவும் 2030ஆம் ஆண்டு செலுத்த வேண்டிய கடனில் 72 வீதம் மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் ஊழல் மோசடிகளுக்காக செலுத்த வேண்டிய கடன் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கடந்த மூன்று வருடங்களில் 12 மில்லியன் அமெரிக்க டொலர் வௌிநாட்டுக் கடன் பெறப்பட்டுள்ளதுடன், அதில் 6 பில்லியன் திட்டங்கள் சர்வதேச கடன் வழங்கும் அமைப்பு மற்றும் இருதரப்பின் அடிப்படை விடயங்களை மையமாக வைத்து நிவாரண அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டவை எனவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவினால் அதிகரிப்பதாக வாக்குறுதி வழங்கியதாகவும் 2006 ஆம் ஆண்டிலிருந்து அரச சேவைக்கான சம்பளம் ஒரு சதத்தினாலேனும் அதிகரிப்படாமையினாலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது பால் மா, எரிவாயு, எரிபொருள் என்பவற்றின் விலை குறைவாகவே காணப்படுவதாகவும் அரச சேவையின் சம்பளம் 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2020 ஆம் ஆண்டு 107 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள வாழ்க்கைச் செலவை குறைக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டை ஆட்சி செய்த ராஜபக்ஸ குடும்பத்தின் சகோதரர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்காக மக்களை திசை திருப்ப மேற்கொள்ளும் முயற்சிகளைத் தோற்கடித்து 2025ஆம் ஆண்டாகும்போது உறுதியான பொருளாதாரத்தை உருவாக்கி
செல்வந்த நாடாக இலங்கையை மாற்றும் திட்டத்துடன் இணைந்து கொள்ளுமாறு நிதியமைச்சர் மங்கள சமரவீர தமது அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, ஹோகந்தரயில் நடைபெற்ற இராணுவத்தினரை நினைவுகூரும் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ நேற்று பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.
யுத்தத்திற்கு பின்னர் நாம் நல்லிணக்கத்துடன் வட பகுதி முழுவதையும் அபிவிருத்தி செய்து வந்தோம். இடம்பெயர்ந்த மக்கள் அனைவரையும் மீளக் குடியேற்றினோம். ஆனால், பல வருடங்களாக இனவாதக் கருத்துக்கள் அந்த இளைஞர்களின் மனதில் பதியச் செய்யப்பட்டிருந்ததால், அந்த கடும்போக்கான கருத்தியல்கள் மேலோங்காதிருப்பதற்கான பாதுகாப்பு கட்டமைப்பொன்றை ஏற்படுத்தினோம். பெற்றுக்கொள்ளப்பட்ட சுதந்திரத்தை உணர்ந்து செயற்படாமை பல்வேறு சக்திகளின் தேவைகள் அல்லது அரசியல் நோக்கத்திற்காக தாரை வார்க்கப்பட்டால் மீண்டும் எமக்கு அத்தகைய ஒரு கால கட்டத்தை சந்திக்க நேரிடும்.
முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸவும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.
அவர் தெரிவித்ததாவது,
நாட்டு மக்கள் நாட்டின் நிலை, அரசியல் நிலை மற்றும் பொருளாதார நிலை தொடர்பில் நன்கு அறிந்துள்ளனர். இராணுவத்தினை அனுஷ்டிக்கும் வாரத்தில் இராணுவத்தினரை சிறையில் அடைத்து அரங்கேற்றப்படுகின்ற நாடகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என நாம் நம்புகின்றோம்.