ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைய இடமளித்துள்ளனர்

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைய இடமளித்துள்ளனர்: ரவி கருணாநாயக்க குற்றச்சாட்டு

by Bella Dalima 20-05-2018 | 9:44 PM
Colombo (News 1st)  சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கை தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்கவிடம் இன்று ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். ப்ளூமென்டல் வீட்டுத்திட்டத் தொகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்தபோது அவரிடம் இது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. கேள்வி: சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை நீங்கள் நிதியமைச்சராகவிருந்த காலப்பகுதியிலா கைச்சாத்திடப்பட்டது? ரவி கருணாநாயக்க:
நாட்டிற்குப் பாதகமான உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கு நாம் அந்த சந்தர்ப்பத்தில் இடமளிக்கவில்லை. அதன் காரணமாக சில விடயங்கள் தாமதமாகின. நாட்டிற்கு நன்மை பயக்கும் விடயங்களை முன்னெடுக்க வேண்டும். வௌ்ளையர்கள் வந்து எமக்குக் கூற வேண்டிய அவசியமில்லை. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியென்பது மத்திய வங்கியின் விளையாட்டாகும். அரசாங்கம் மாறிய போதிலும், பேய்கள் அவ்வாறே உள்ளன. அவர்கள் சர்வதேச நாணய நிதியம் கூறும் வகையில் செயற்படுகின்றனர். ரூபாவின் பெறுமதியை மத்திய வங்கியின் நிதிக் கொள்கையினால் நிர்வகிக்க வேண்டும். அது முற்றியும் தோல்வியடைந்துள்ளது. பணவீக்கம் ஒருபுறம் அதிகரிக்கிறது. எமது உள்ளூர் உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி வேகம் குறைவடைந்துள்ளது. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியுறுவதற்கு இடமளித்துள்ளனர். இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதால் சிலருக்கு திருப்தி ஏற்படுகிறது.