ரக்பி போட்டிகளின் போது ரசிகர்களிடையே மோதல்

பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி போட்டிகளின் போது ரசிகர்களிடையே மோதல்

by Bella Dalima 20-05-2018 | 10:12 PM
Colombo (News 1st)  பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி லீக் தொடரில் நேற்று (19) நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி லீக் தொடரில், கிண்ணத்திற்கான பிரிவில் கொழும்பு ரோயல் மற்றும் வெஸ்லி கல்லூரி அணிகளுக்கு இடையிலான போட்டி CR & FC மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 18-17 என்ற புள்ளிகள் கணக்கில் கொழும்பு ரோயல் கல்லூரி அணி வெற்றி பெற்றது. போட்டி நிறைவு பெற்றதும் ரசிகர்கள் அமைதியற்ற முறையில் செயற்பட்டனர். எனினும், மாணவத்தலைவர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து வீரர்களையும் நடுவர்களையும் பாதுகாப்பான முறையில் மைதானத்திலிருந்து அழைத்துச் சென்றனர். எவ்வாறாயினும், இந்த அமைதியின்மையுடன் தொடர்புபடாத ரசிகர்களும் இதன்போது அசௌகரியத்தை எதிர்நோக்கினர். விளையாட்டரங்கில் இருந்த தளபாடங்களும் சேதமடைந்தன. இதேவேளை, கிண்ணத்திற்கான மற்றுமொரு போட்டியில் கண்டி தர்மராஜ மற்றும் வித்தியார்த்த கல்லூரி அணிகள் போகம்பரை மைதானத்தில் மோதிக்கொண்டன. இந்தப் போட்டியிலும் அமைதியற்ற நிலை உருவானது. எனினும், இந்தப் போட்டியில் 29 - 24 என்ற புள்ளிகள் கணக்கில் கண்டி தர்மராஜ அணி வெற்றி பெற்றதோடு, பொலிஸாரின் தலையீட்டையடுத்து நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. இந்தப் போட்டியின் போது நடுவர் ஒருவருக்கு ரசிகர்கள் அச்சுறுத்தல் விடுத்ததோடு, பொலிஸார் நடுவர்களை பாதுக்காப்பான முறையில் மைதானத்திற்கு வெளியே அழைத்துச் சென்றனர்.