நாட்டின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

by Bella Dalima 20-05-2018 | 10:48 PM
Colombo (News 1st)  கடந்த 24 மணித்தியாலங்களில் 5 மாவட்டங்களில் 150 மில்லிமீட்டருக்கு மேல் பலத்த மழை பெய்துள்ளதால் தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றிரவு 7.30 தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் இந்த சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல, கலவான மற்றும் கிரிஎல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களை விழிப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் தவலம, நாகொட, காலி மற்றும் கடவத் சத்தர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த, புலத்சிங்கல, வலல்லாவிட்ட மற்றும் இங்கிரிய பகுதிகளைச் சேர்ந்த மக்களும் வானிலை தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என அந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட. தெரணியகல, புலத்கொஹுபிட்டிய, அரநாயக்க மற்றும் ருவான்வெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்கும் இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.