தமிழ் மக்கள் தற்செயலாக சாகவில்லை

சதி செய்து கொல்லப்பட்டவர்களை நினைவேந்தாது எவ்வாறு இருக்க முடியும்: சி.வி. விக்னேஷ்வரன்

by Bella Dalima 20-05-2018 | 8:21 PM
Colombo (News 1st)  தமிழ் மக்கள் தற்செயலாக சாகவில்லையெனவும் அவர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாகவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். சரணடைந்தால் விடுவிப்போம் என்று ஏமாற்றி, சதி செய்து கொல்லப்பட்டவர்களை நினைவேந்தாது எவ்வாறு இருக்க முடியும் எனவும் முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் கொழும்பில் இருந்து ஒருவர் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் பதிலளித்துள்ளார். வடக்கு, கிழக்கில் மக்களுக்கான உரிமைகளைக் கோரினால் கொழும்பில் உள்ள தமிழர்களே உடனடியாக பதற்றப்படுவதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் தமக்கிருக்கும் சொத்து, சுகம், வசதிகள், பதவிகள் யாவற்றையும் இழந்துவிடுவோமோ என்ற பயம் அவர்களுக்கு உள்ளதாகவும் கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் ஏன் உருவாகினார்கள் என்பதனை சிந்திக்குமாறு தனது பதிலில் குறிப்பிட்டுள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன், தமிழ் மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகள் ஆக்கப்பட்ட பின்னரே இளைஞர்கள் யுத்தம் பற்றி சிந்திக்கத் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார். மத்திய அரசாங்கம் பிழைகளைத் தம்வசம் வைத்துக்கொண்டு தமிழ் மக்களை பிழை கூறுவது பொருத்தமற்றது எனவும் முதலமைச்சரின் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் அதிகாரங்களைக் குறைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்ட அரசியல் தலைவர்கள் மூலமே நாட்டில் இக்கட்டான நிலைமை உருவாகியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் உரிமைகளைப் பெறும் வரையில் போராடாவிட்டால், தமிழ் மக்கள் இருந்த இடமே தெரியாமல் போய் விடும் என வட மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு, கிழக்கில் தமது காணிகளை படையினர் கையகப்படுத்தியுள்ளதாகவும் பல தடவைகள் வட மாகாண சபைக்குத் தெரியாமலே இது நடந்துள்ளதாகவும் வட மாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். நடக்கும் விடயங்களைப் பார்க்கும் போது, தமிழர்கள் வட - கிழக்கில் தொடர்ந்து பெரும்பான்மையினராகக் கணிக்க முடியாத நிலையே உருவாகி வருதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில், இனப்படுகொலைக்கு ஆதரவு தெரிவித்தா இந்தக் கேள்வியைக் கேட்டீர்கள் என கேள்வியைக் கேட்டவருக்கு அனுப்பி வைத்துள்ள பதிலில் முதலமைச்சர் வினவியுள்ளார்.