அனல் மின் நிலையத்தால் பாரிய பாதிப்புகள் ஏற்படும்

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தினால் பாரிய சுகாதார பாதிப்புகள் ஏற்படக்கூடும்: சூழலியலாளர்கள் அறிவுறுத்தல்

by Bella Dalima 19-05-2018 | 8:12 PM
Colombo (News 1st)  நுரைச்சோலை அனல் மின் நிலையத்தினால் பாரிய சுகாதார பாதிப்புகள் ஏற்படக்கூடும்: சூழலியலாளர்கள் அறிவுறுத்தல் நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தினால் பாரிய சுகாதார பாதிப்புகள் ஏற்படக்கூடும் என நிலக்கரிக்கு எதிரான கூட்டமைப்பு எனப்படும் சூழலியலாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. மின் நிலையத்தின் செயற்பாடுகளினால் ஏற்படும் சூழல் பிரச்சினைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையை வௌியிட்ட போதே இந்த விடயம் கூறப்பட்டது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை அண்மித்துள்ள மக்களின் சுகாதார மற்றும் சூழல் பிரச்சினைகள் தொடர்பில் ஏற்கனவே பல தடவைகள் நியூஸ்ஃபெஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது. சல்ஃபர் -டை-ஆக்சைட், பார உலோகம் மற்றும் பென்சின் ஆகிய இராசாயனப் பொருட்கள், நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் இருந்து வௌியேற்றப்படுவதாகவும் இது மின் நிலையத்திற்கு அருகிலுள்ள மக்களின் ஆயுட்காலத்தில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் நிலக்கரிக்கு எதிரான கூட்டமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், சல்ஃபர் -டை-ஆக்சைட் காரணமாக சுவாசக்கோளாறுகள் ஏற்படக்கூடும் என்பதுடன், நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகமாகவுள்ளன. மின் நிலையத்தில் இருந்து வௌியேற்றப்படும் விசத்தன்மையான பார உலோகம் காரணமாக ஒஸ்டியோபொரோசிஸ், இனப்பெருக்க கட்டமைப்பில் பாதிப்பு, சிறுவர் மரணங்கள் அதிகரிக்கும் அபாயம் என்பன காணப்படுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், சூழல் பாதிப்புக்களும் உயர் மட்டத்திலுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.