சுதந்திர நினைவு மண்டபக்கட்டிடம் தாழிறங்கும் அபாயம்

சுதந்திர நினைவு மண்டபக் கட்டிடம் தாழிறங்கும் அபாயம்

by Bella Dalima 19-05-2018 | 4:32 PM
Colombo (News 1st)  கொழும்பு சுதந்திர சதுக்கத்திலுள்ள சுதந்திர மண்டபக் கட்டிடம் (Independence Memorial Hall) தாழிறங்கும் அபாயம் நிலவுகிறது. இரண்டு கட்டங்களாக நிர்மாணிக்கப்பட்ட குறித்த கட்டிடத்தின் பின் பகுதி தாழிறங்கும் அபாயமுள்ளதாக கலாசார அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கட்டிடத்தின் பின் பகுதியில் வெடிப்புகள் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 1948 ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்றதை முன்னிட்டு 1949 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர மண்டபம் நிர்மாணிக்கப்பட்டது. 1953 ஆம் ஆண்டு இதன் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்தன. கட்டிடம் தாழிறங்கும் அபாயம் குறித்து விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. விடயம் தொடர்பில் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் நிபுணர்களிடம் அறிக்கை கோரியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். குறித்த அறிக்கை அடுத்த வாரமளவில் தமக்கு கிடைக்கவுள்ளதாகவும் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ கூறினார். அதன் பின்னர், உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.