கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் முற்றம் 

கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் முற்றம் 

by Bella Dalima 18-05-2018 | 8:32 PM
Colombo (News 1st)  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுப்பூர்வமாக இன்று அனுஷ்டிக்கப்பட்டன. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியாக முள்ளிவாய்க்காலை சென்றடைந்தனர். இதேவேளை, யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பமான சுடரேந்திய வாகன பவனியும் முள்ளிவாய்க்கால் முற்றத்தினை சென்றடைந்தது. வடக்கு ,கிழக்கின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருந்திரளான பொதுமக்கள் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு வருகை தந்திருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபையினர் உள்ளிட்டோரும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். எனினும், பிரதான பொதுச்சுடர் ஏற்றும் பகுதிக்குள் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. யுத்தத்தில் தாய், தந்தையரை இழந்த ஒரு யுவதியினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. இந்தச் சுடரை வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் யுவதியிடம் கையளித்தார். இதனையடுத்து, வட மாகாண முதலமைச்சர் மலரஞ்சலி செலுத்தினார். கண்ணீரும், அழுகுரலுமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றம் மாறியது.  
  முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை முன்னிட்டு வடமாகாணத்தில் வர்த்தக நிலையங்கள் இன்று மூடப்பட்டிருந்தன.  
  வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன. வவுனியா அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், வவுனியா சித்திவிநாயகர் ஆலயத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி விசேட பூசைகள் இடம்பெற்றன. இதேவளை, வவுனியா குத்தர் வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் ஆத்ம சாந்தி பிரார்த்தனை நிகழ்வுகள் இன்று காலை இடம்பெற்றன. மன்னார் நகர மண்டபத்தில் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகள்இன்று காலை இடம்பெற்றன. இதன்போது, உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வுகள் கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் இன்று காலை இடம்பெற்றது. உயிரிழந்தவர்களின் நினைவாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு - கிரான் விஷ்ணு ஆலயத்தில் விசேட பூசைகள் இடம்பெற்றன. உயிரிழந்தவர்களின் நினைவாக கிரான் விஷ்ணு ஆலய முன்றலில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. இதேவேளை, மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை இடம்பெற்றன. இந்த நிகழ்வு மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பு மற்றும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. அம்பாறை - காரைத்தீவு கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்வு இன்று பிற்பகல் இடம்பெற்றது. இந்த நிகழ்வு காரைத்தீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. திருகோணமலை - மூதூர் - பட்டித்திடல் சித்திவிநாயகர் ஆலயத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி விசேட பூசைகள் இடம்பெற்றன.  
  திருகோணமலை காளி கோவிலிலும் விசேட பூசைகள் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன் கலந்து கொண்டிருந்தார்.  
  இந்நிலையில், முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் இராணுவத்தினரால் இன்று குளிர்பானம் வழங்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது. புதுக்குடியிருப்பு இராணுவத்தினரால் பொதுமக்களுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது. 68 ஆவது இராணுவப் படைப்பிரிவினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.  
  இதேவேளை, தமிழகம் - இராமேஸ்வரத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன. முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு ஆத்மசாந்தி வேண்டி இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வு நாம் தமிழர் கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.