வறுமையின் பிடியிலும் பிரகாசிக்கும் வீராங்கனை

வறுமையின் பிடியிலும் திறமையால் பிரகாசிக்கும் வீராங்கனை

by Bella Dalima 18-05-2018 | 9:17 PM
Colombo (News 1st)  வறுமையின் பிடியிலும் திறமையால் பிரகாசிக்கும் ஆற்றல் மிகு பலர் இன்றும் இருக்கவே செய்கின்றனர். நாகேந்திரம் உதயவாணி அதற்கு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார். மூன்றாவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற வீராங்கனை இவர். அந்தப் போட்டிகள் கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் இம்மாதம் நடைபெற்றதுடன், ஈட்டி எறிதலில் 39.12 மீட்டர் தூரத்திற்கு ஆற்றலை வெளிப்படுத்திய உதயவாணி வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார். தன்னை விட வளங்களும், வசதிகளும் படைத்தவர்களையே உதயவாணி விஞ்சியுள்ளார் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. திருகோணமலை நகரிலிருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மூதூர் - தங்க நகர் கிராமமே உதயவாணியின் வாழ்விடம். பட்டித்திடல் மகா வித்தியாலயத்தில் உயர் தரம் கற்கும் உதயவாணி, இவ்வருடம் பரீட்சைக்கு தோற்றவுள்ளார். 2014 ஆம் ஆண்டில் ஈட்டி எறிதல் விளையாட்டை ஆரம்பித்த இவர் 2015 ஆம் ஆண்டு 35.47 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்ததே இன்றும் கிழக்கு மாகாணத்திற்கான சாதனையாகவுள்ளது. உதயவாணியின் தந்தை கூலித்தொழிலாளி என்பதுடன், மாடு வளர்ப்பில் ஈடுபட்டு அன்றாடம் பால் மூலம் கிடைக்கும் வருவாயில் குடும்பத்தை பராமரிக்கிறார். இவ்வாறான நிலையில் திருகோணமலை ஏகாம்பரம் மைதானத்திற்கு பயிற்சிக்கு செல்வதற்கு உதயவாணிக்கு ஒரு நாளைக்கான பஸ் கட்டணம் மாத்திரம் 250 ரூபா வரை தேவைப்படுவதுடன், அதனை அவரது குடும்பத்தார் கடும் சிரமத்துடனேயே சமாளிக்கிறார்கள். உரிய முறையில் பயிற்சியும் ஊக்கமும் அளித்தால் உதயவாணியால் சர்வதேச பதக்கங்களை மென்மேலும் ஈட்ட முடியும் என்பது மாத்திரம் நிச்சயம்.