வடக்கு முதல்வரினால் நினைவேந்தல் பிரகடனம் வௌியீடு

வட மாகாண முதலமைச்சரினால் நினைவேந்தல் பிரகடனம் வௌியீடு

by Bella Dalima 18-05-2018 | 8:49 PM
Colombo (News 1st)  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டன. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தின உரையை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் நிகழ்த்தினார். வட மாகாண முதலமைச்சரினால் நினைவேந்தல் பிரகடனம் இன்று வௌியிட்டு வைக்கப்பட்டது. பிரகடனத்தின் சாராம்சம் 1. இந்த வருடத்தில் இருந்து ஒவ்வொரு மே 18 ஆம் திகதியும் தமிழர் இனவழிப்பு நாளாகத் தொடர்ந்து எமது மக்களால் அங்கீகரிக்கப்பட்டு வர வேண்டும். 2. சர்வதேச சமூகமானது விரைவாக இந்த இனவழிப்புக்கான சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்ட காலதாமதமின்றி தலையிடவேண்டும். 3. தொடர்ச்சியாக கட்டமைப்புசார் இனவழிப்பை சந்தித்து வரும் இனம் என்ற வகையில், இவற்றைத் தடுக்கும் வகையில், எமக்கான தீர்வை இறைமை, தாயகம், தனித்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் பரிகார நீதியூடாகப் பெற்றுத்தர சர்வதேசம் முன்வர வேண்டும். 4. போருக்கு பின்னரான இன்றைய அவலத்தை 'பேரிடர் நிலைமையாக' கருதி அதற்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் வாழ்க்கையை மீள்கட்டியெழுப்ப சர்வதேச சமூகம் தம்மாலான உதவிகள் சகலதையும் நேரடியாக வழங்க முன்வர வேண்டும். 5. ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயக பிரதேசங்களிலிருந்து படையினர் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும். 6. தமிழ் மக்களின் ஒற்றுமையின் சின்னமாக, ஒருமித்த துக்க நாளாக மே 18 ஐக் கணித்து, வரும் வருடங்களில் இந்த நினைவேந்தலை கட்சி பேதமின்றி, பிராந்திய பேதமின்றி கொண்டு நடத்த நாம் முன்வர வேண்டும்.